இலங்கை

மாணவர்களிடையே பரவும் வைரஸ் மெனிஞ்சைடிஸ் குறித்து சுகாதாரப் பிரிவு முக்கிய தகவல்!

பாடசாலை மாணவர்களிடையே தற்போது வைரஸ் மெனிஞ்சைடிஸ் (Viral Meningitis) நோய் நிலைமை பரவி வருகின்ற போதிலும், அது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதான தொற்றுநோயியல் நிபுணர் விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.

முதன்முதலில் தெனியாய பகுதியில் பதிவான மெனிஞ்சைடிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல் நோய் நிலைமை, தற்போது மேலும் சில பகுதிகளில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தியத்தலாவையில் 28 நோயாளர்களும், வெலிமடையில் 13 நோயாளர்களும், ரிகில்லகஸ்கட பகுதியில் சுமார் 25 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைப் பகிர்ந்து கொண்டார்.

இது ஒரு வைரஸ் மெனிஞ்சைடிஸ் நிலைமை எனவும், இது குறித்து தொற்றுநோயியல் பிரிவும் மாகாண சுகாதார அதிகாரிகளும் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் விசேட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்நோய் பாடசாலை மாணவர்களிடையே அதிகமாக பரவியுள்ளதுடன், கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த நோய் நிலைமை முறையான சிகிச்சையின் மூலம் குணமடையக்கூடியது என்பதால், இது குறித்து தேவையற்ற பயம் கொள்ளத் தேவையில்லை என விசேட வைத்தியர் பாலித கருணாபேம சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த விசேட வைத்தியர் பாலித கருணாபேம,

“இந்த நாட்களில் மெனிஞ்சைடிஸ் நோய் நிலைமை பதிவாகி வருகிறது. தெனியாயவிலேயே இதனை முதலில் அவதானித்தோம். தற்போது தியத்தலாவை, வெலிமடை மற்றும் ரிகில்லகஸ்கட ஆகிய வைத்தியசாலைகளிலும் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இது குறித்து தொற்றுநோயியல் பிரிவும் மாகாண சுகாதார அதிகாரிகளும் உரிய ஆய்வுகளையும் கண்காணிப்புகளையும் மேற்கொண்டனர். அதற்கமைய, இது வைரஸ் மெனிஞ்சைடிஸ் நிலைமை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நோய் பாடசாலை மாணவர்களிடையேயே பரவி வருகின்றது. கடுமையான காய்ச்சல், தலைவலி, வாந்தி என்பன இதன் அறிகுறிகளாகும். இந்நோய்க்கு ஆளான அனைத்து நோயாளர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சைகளுடன் 5 முதல் 7 நாட்களுக்குள் இந்நோய் குணமடைந்துவிடும். எனவே, வீண் அச்சம் கொள்ள வேண்டாம். இந்நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அனைத்து நோயாளர்களுக்கும் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யாருக்கும் நிலைமை பாரதூரமாக இல்லை. தற்போது நிலவும் மழைக்காலம் மற்றும் வெசாக் காலத்தில் தன்சல் நிலையங்கள் குறித்தும் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன், இந்நோய் நிலைமையைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோருகிறோம். குறிப்பாக, இந்நோய் அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலமே பரவுவதால் அவதானமாக இருங்கள்.

முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். எப்படியிருப்பினும், இந்நோய் பரவுவதைக் குறைப்பதற்காக நாம் குறிப்பாக பாடசாலைகளுடன் சிறந்த ஒருங்கிணைப்புடன் பணியாற்றி வருகிறோம்” என்றார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker