ஆலையடிவேம்பு

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம்: அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரத்தில் விசேட தூய்மைப்படுத்தல் பணி; 250 கிலோ கழிவுகள் அகற்றம்!

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய சமுத்திர வளங்கள் பாதுகாப்பு வாரம் – 2026 ஐ முன்னிட்டு, அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் கடற்கரையோரப் பகுதியில் இன்று (22) விசேட கடற்கரைத் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடற்கரைச் சூழலைப் பாதுகாத்தல், கடற்கரை மாசுபாட்டைக் குறைத்தல், கடல்வாழ் உயிரினங்களை பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இத்தூய்மைப்படுத்தல் நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது.

கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) அம்பாறை மாவட்ட கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரி கே.சிவகுமார் மற்றும் உதவி கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரி எச்.கே.எம். ஜெம்ஸீத் ஹஸன்ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 241 ஆவது இராணுவப் படைப்பிரிவைச் சேர்ந்த Lt. Col. RMVB Samaranayaka தலைமையிலான இராணுவத்தினரும், ஒலுவில் கடற்படைப் பிரிவைச் சேர்ந்த Lt. NDT Abeywickrama தலைமையிலான கடற்படையினரும் கலந்து கொண்டு கடற்கரைத் தூய்மைப்படுத்தல் பணிகளுக்கு தமது முழுமையான பங்களிப்பை வழங்கினர். மேலும், சிவில் பாதுகாப்புப் படையினர், ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆலையடிவேம்பு பிரதேச சபை பணியாளர்கள், சமுர்த்தி பயனாளர் குழுத் தலைவர் மற்றும் பிரஜாஷக்தி உறுப்பினர்களின் தலைவர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கடற்கரைத் தூய்மைப்படுத்தல் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று தமது பங்களிப்பை வழங்கினர்.

தூய்மைப்படுத்தல் நடவடிக்கையின் போது கடற்கரையோரப் பகுதியில் நீண்டகாலமாக தேங்கியிருந்த பல்வேறு வகையான கழிவுகள் சேகரிக்கப்பட்டன. அவை பொலித்தீன் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடிக் கழிவுகள், உக்கக்கூடிய கழிவுகள் மற்றும் உக்காத கழிவுகள் என முறையாகத் தரம் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வகை கழிவுகளினதும் நிறை தனித்தனியாக அளவிடப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவை உரிய முறையில் அகற்றுவதற்காக தனித்தனியாகச் சேகரித்து எடுத்துச் செல்லப்பட்டன.

இன்றைய தூய்மைப்படுத்தல் நடவடிக்கையின் மூலம் மொத்தம் 250 கிலோ 154 கிராம் (250.154 கிலோ) நிறையுடைய கழிவுகள் கடற்கரைப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டன. குறிப்பாக, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் கடற்கரையோரத்தில் காணப்பட்டதுடன், அவற்றில் ஒரு பகுதி பொதுமக்களின் கவனக்குறைவான கழிவு அகற்றல் நடவடிக்கைகளாலும், கடல் மற்றும் அலைகளின் ஊடாக கரையொதுங்கிய கழிவுகளாலும் ஏற்பட்டிருக்கக்கூடும் என அவதானிக்கப்பட்டது.

கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட கழிவுகளின் அளவை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டுவதன் மூலம், கடற்கரையோரங்களில் கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக, கடற்கரைப் பகுதிகளில் எதிர்காலத்தில் கழிவுகள் தேங்காத வகையில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்படுவதுடன், கழிவுகளை முறையாகச் சேகரித்து அகற்றுவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

கடற்கரை மற்றும் கடல் சூழலில் காணப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையையும் பாதிக்கக்கூடியவை. எனவே, கடற்கரைத் தூய்மையைப் பேணுவது அரச நிறுவனங்களின் பொறுப்பு மட்டுமல்லாது, கடற்கரையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பொதுமகனினதும் சமூகப் பொறுப்பாகும் என இந்நிகழ்வின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கழிவுகளை வகைப்படுத்தி, அவற்றின் நிறையை அளவிட்டு பதிவு செய்தமை, குறித்த கடற்கரைப் பகுதியில் காணப்படும் மாசுபாட்டின் தன்மை மற்றும் அளவை மதிப்பிடுவதற்கும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

கிழக்கு மாகாணத்தின் கடற்கரைப் பகுதிகளில் அதிகரித்து வரும் கடற்கரை மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், கடல் வளங்களையும் கடல்சார் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவும் அரச நிறுவனங்கள், பாதுகாப்புப் படையினர், உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் இவ்வாறான செயற்றிட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் இந்நிகழ்வின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டது.

“தூய்மையான கடற்கரை – பாதுகாக்கப்பட்ட கடல் – வளமான எதிர்காலம்” என்ற நோக்குடன், தற்போதைய கடற்கரைச் சூழலைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பேணுவதுடன், எதிர்கால சந்ததியினருக்காக ஆரோக்கியமானதும் அழகானதுமான கடல் மற்றும் கடற்கரைச் சூழலைப் பாதுகாத்து வழங்குவதே இவ்வாறான செயற்றிட்டங்களின் பிரதான நோக்கமாகும்.

 

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker