இலங்கைபிரதான செய்திகள்
Trending

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 35,000 ஆக உயர்வு; 19 பேர் உயிரிழப்பு நாளை முதல் 3 நாட்களுக்கு விசேட நுளம்பு ஒழிப்புத் திட்டம்..

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 ஐக் கடந்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் எச்சரித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்துவதற்காக நாளை திங்கட்கிழமை (ஜூன் 08) முதல் மூன்று நாட்களுக்கு நாடு தழுவிய ரீதியில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது நாடு முழுவதும் சுமார் 35,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் தென் மாகாணம் ஆகிய பகுதிகளிலிருந்தே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். இந்த நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளமையால் எமது சூழலில் பல்வேறு காய்ச்சல்கள் பரவி வருகின்றன் குறிப்பாக சாதாரண வைரஸ் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலிக்காய்ச்சல், இன்ஃபுளுவன்சா மற்றும் இன்ஃபுளுவன்சா மெனிஞ்சைடிஸ் போன்ற பல வகையான காய்ச்சல்கள் காணப்படுகின்றன.

எனவே, எவருக்கேனும் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், உடல் வலி, மூட்டு வலி, தலைவலி, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால், மருத்துவரை அணுகி தமக்கு ஏற்பட்டிருப்பது டெங்கு காய்ச்சலா இல்லையா என்பதைச் சந்தேகமற உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமானதாகும்.

அத்துடன், இந்த டெங்கு காய்ச்சலானது எந்தவொரு வயதினருக்கும் ஏற்படக்கூடும். இதன் காரணமாக, ஏதேனும் ஒரு வழியில் கர்ப்பிணித் தாய்மார்கள், சிறிய குழந்தைகள், முதியவர்கள் அல்லது வேறு ஏதேனும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டால், முதல் 24 மணித்தியாலங்களுக்குள்ளேயே ஒரு மருத்துவரை அணுகி, தமக்கு இருப்பது டெங்கு காய்ச்சல் தானா என்பதை அறிகுறிகள் மூலம் கண்டறிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.

தற்போது பதிவாகியுள்ள 35,000 நோயாளர்களில் 19 மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த மரணங்கள் குறித்து ஆராயும் போது, மரணித்தவர்களில் குறிப்பிட்ட சதவீதமானோர் மருத்துவமனைக்கு வருவதற்குத் தாமதித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, அவர்கள் தகுந்த மருந்துகளை உட்கொள்ளாமல் வேறு சில மருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர். எனவே, இந்த நாட்களில் இலங்கை முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், எவருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால், அது டெங்கு காய்ச்சல் இல்லை என்பதை ஒரு மருத்துவர் உறுதிப்படுத்தும் வரை, காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக பரசிட்டமால் வகை மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களை அறிவுறுத்துகின்றோம்.

இதனைத் தவிர்த்து, என்சைட் தொகுதி மருந்துகள் அல்லது ஸ்டீராய்டு தொகுதி மருந்துகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது. மேலும், 48 மணித்தியாலங்களுக்கும் மேலாகக் காய்ச்சல் நீடித்தால், ஒரு மருத்துவரை அணுகியே சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு நாளை திங்கட்கிழமையிலிருந்து வரும் 3 நாட்களுக்கு (எதிர்வரும் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில்) ஒரு விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரையும் தமது வீட்டு சூழலை தூய்மையாக வைத்திருக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker