இலங்கைபிரதான செய்திகள்
Trending

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த ஒரு வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் லக்மாளி ஹேமச்சந்திரவுக்கு விடுத்த ஒழுக்கமற்ற அச்சுறுத்தலைக் கண்டிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கமற்ற நடத்தைகளைக் கட்டுப்படுத்த ஒரு வழிமுறையை உருவாக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக் கொள்வதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை (11) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

“எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளர் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் லக்மாளி ஹேமச்சந்திரவை அச்சுறுத்தும் வகையில் பேசியிருக்கிறார். இதை வெறுமனே அந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகக் கருத முடியாது. தெற்காசியாவில் மிகக் குறைந்த பெண் பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்றம் இதுவாகும்.

இவ்வாறான சூழ்நிலையிலும் ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுப்பதை நான் வன்முறையாகவும் துன்புறுத்தலாகவுமே பார்க்கிறேன். இந்த கலாசாரத்தை ஒழிப்பதற்கே நாம் முயற்சி செய்கிறோம். இன்று காலையிலும் இந்த குழுவினர் இதேபோன்றுதான் இங்கு நடந்து கொண்டார்கள்.

எனவே, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம், இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் விடயங்களைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுவே இச்சம்பவம் தொடர்பான மக்களின் வெளிப்பாடாக இருக்கின்றது. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி ஆராய்ந்து பாருங்கள். இந்த சம்பவம் எவ்வளவு அருவருப்பானது என்பதை நீங்களே பாருங்கள். இந்த நாட்டு மக்கள் இதற்கு மேலும் இந்த முறையை விரும்பவில்லை.

நாம் கடுமையாக உழைத்தே 22 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்த பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்திருக்கிறோம். இன்று அந்தப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாட்டின் ஒட்டுமொத்தப் பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை இவ்வாறான வாய்மொழி அச்சுறுத்தல்களாகவே ஆரம்பமாகின்றன. புதிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் திறமைகள் இந்தப் பாராளுமன்றத்திற்கு ஒரு சவாலாக அமைந்திருக்கின்றது. இதுவே ஆண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சவாலாகவே அமைந்திருக்கிறது, இதுதான் இங்குள்ள பிரச்சனை. இந்த நாட்டின் பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாகும்.

இந்த நாட்டின் ஒட்டுமொத்தப் பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் பேசும்போது அவர்களை அச்சுறுத்துவது என்பது ஒட்டுமொத்தப் பெண்களுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். மக்களின் கருத்தைப் புரிந்துகொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களாகிய நீங்களும் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கும் நாட்டின் இளம் சிறுமிகளும் ‘ஒரு நாள் நானும் அவர்களைப் போல் வரவேண்டும்’ என்று கனவு காண்கிறார்கள். அந்த கனவுகளையே நீங்கள் சிதைக்கிறீர்கள். கௌரவ சபாநாயகர் அவர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களின் இவ்வாறான தரக்குறைவான நடத்தைகளைக் கட்டுப்படுத்த ஒரு வழிமுறையை உருவாக்குங்கள்.

இந்த பாராளுமன்றத்தில் இப்போது இருக்கும் எதிர்க்கட்சி அங்கத்தவர்களின் எண்ணிக்கையை விட மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகும். பாராளுமன்றத்திற்குள்ளும் அந்த மாற்றம் தேவைப்பட்டதனாலேயே, மக்கள் எதிர்க்கட்சியை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளனர்” எனக் கூறிய பிரதமர், விவாதம் செய்யும் அதே நேரம் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker