விளையாட்டு

இரண்டாவது தடவையாகவும் சேம்பியனாகிய RCB!

கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி அடித்த வெற்றி சிக்ஸரின் உதவியுடன், நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (RCB), நேற்றிரவு (மே 31) குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2026 இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்தை தனதாக்கியது.

போட்டியில் 156 ஓட்டங்களை சேஸிங் செய்த ரஜத் பட்டிதர் தலைமையிலான RCB அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்களை எடுத்து வாகை சூடியது.

இன்னிங்ஸில் RCB அணியின் மூத்த வீரர் விராட் கோலி 42 பந்துகளில் 75 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதில் ஒன்பது பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.

இது இந்த சீசனில் அவர் எடுத்த ஆறாவது 50-க்கும் மேற்பட்ட ஓட்டம் ஆகும்.

மேலும், வெங்கடேஷ் ஐயரின் 16 பந்துகளில் 32 ஓட்டங்கள், RCB அணிக்கு இலகுவாக வெற்றியை பெறுவதற்கு வழி வகுத்தது.

இந்த வெற்றியுடன் 2025 ஆம் ஆண்டில் தனது முதல் பட்டத்தை வென்ற RCB அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஐ.பி.எல். பட்டங்களை வென்ற மூன்றாவது அணி என்ற பெருமையைப் பெற்றது.

இதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் (2010 மற்றும் 2011) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (2019 மற்றும் 2020) அணிகள் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தன.

நடப்பு சீசனில் விராட் கோலி மொத்தமாக 16 போட்டிகளில் 675 ஓட்டங்களை எடுத்தார், அதே நேரத்தில் புவனேஷ்வர் குமார் 28 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடந்த 2026 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற RCB அணி முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சுப்மன் கில் தலைமையிலான GT அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இன்னிங்ஸ் முழுவதும் GT துடுப்பாட்டத்தில் பெரிய அளவில் வேகம் எடுக்கவில்லை, மேலும் 15 ஆவது ஓவரின் தொடக்கத்தில் 99 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன் (12) மற்றும் ஷுப்மன் கில் (10) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

GT அணியின் துடுப்பாட்டத்துக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக வொஷிங்டன் சுந்தர் 37 பந்துகளில் ஐந்து பவுண்டரிகளை அடித்து, 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவரின் சுந்தரின் சிறப்பான ஆட்டம் இருந்தபோதிலும், டைட்டன்ஸ் அணியால் ஒரு போதும் வேகமாக ஓட்டங்கள‍ை பெற முடியவில்லை.

அணியில் உள்ள வேறு எந்த துடுப்பாட்ட வீரரும் 20 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க முடியாது போனது.
RCB அணி சார்பில் பநது வீச்சில் ரசிக் சலாம் டார் தனது நான்கு ஓவர்களில் 27 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவர் தவிர, புவனேஷ்வர் குமா 2-29 என்ற பந்துவீச்சுடன், ஜோஷ் ஹேசில்வுட்டுடன் (2-37) நான்கு விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டார்.

குருணல் பாண்டியா தனது பங்கிற்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி தெரிவானதுடன், தொடரின் ஆட்டநாயகனாக ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்கார் வைபவ் சூர்யான்ஷி தெரிவானார்.

15 வயதான வைபவ் சூர்யான்ஷி 16 இன்னிங்ஸ்களில் 237 ஸ்டிரைக் ரேட்டில் 776 ஓட்டங்களை எடுத்து நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் ஆனார்.

அதேசமயம் குஜராத்தைச் சேர்ந்த ககிசோ ரபாடா அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆனார் – 17 போட்டிகளில் 29 விக்கெட்டுகள்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker