கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன செய்ய வேண்டும் – பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கைத்தொலைபேசிகள் காணாமல் போனது அல்லது திருடப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் தினசரி பதிவாகி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைத்தொலைபேசி தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றால், அதன் மூலம் நிதி மோசடிகள், தனிப்பட்ட தரவுகள் மற்றும் புகைப்படங்கள் திருடப்பட்டு பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால், உண்மையான உரிமையாளர்களே குற்றவாளிகளாக சிக்கும் அபாயமும் ஏற்படுகிறது.
எனவே, கைத்தொலைபேசி தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ பொதுமக்கள் உடனடியாகப் பின்வரும் 4 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய 4 முக்கிய வழிமுறைகள்:
சிம் அட்டையை உடனடியாக செயலிழக்கச் செய்தல்: தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு சிம் அட்டையை உடனடியாக முடக்க வேண்டும். இது மூன்றாம் தரப்பினர் உங்கள் எண்ணைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதுடன், தொலைபேசியை மீண்டும் கண்டுபிடிப்பதையும் எளிதாக்கும்.
IMEI இலக்கத்தைக் குறிப்பிட்டு முறைப்பாடு செய்தல்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யும்போது கைபேசியின் தனித்துவமான IMEI இலக்கத்தைக் குறிப்பிடுவது மிகவும் அவசியமாகும்.
IMEI இலக்கத்தை முன்கூட்டியே குறித்து வைத்தல்: கைபேசியில் *#06# என்ற குறியீட்டைப் பயன்படுத்தி IMEI இலக்கத்தை அறிந்துகொள்ளலாம். இந்த விபரங்களை முன்கூட்டியே பாதுகாப்பாகக் குறித்து வைப்பது ஒவ்வொரு பயனரினதும் பொறுப்பாகும்.
‘I Need’ இணையத்தள முறைமையைப் பயன்படுத்துதல்: இலங்கை பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.ineed.police.lk என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து, தேவையான விபரங்களை வழங்குவதன் மூலம் காணாமல் போன கைத்தொலைபேசிகளை விரைவாகத் தேடிக் கண்டறிய முடியும்.
இலங்கை பொலிஸாரால் மீட்கப்பட்ட கைத்தொலைபேசிகளின் புள்ளிவிபரங்கள் வருமாறு:
2024 ஆம் ஆண்டில் காணாமல் போன 2,796 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், திருடப்பட்ட 928 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டு குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் காணாமல் போன 2,355 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட 1,019 தொலைபேசிகள் தொடர்பாகக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமக்குச் சொந்தமில்லாத ஒரு பொருளைத் தன்வசம் வைத்திருப்பது இலங்கைத் தண்டனைச் சட்டத்தின்படி குற்றமாகும். இதற்குக் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதேபோல், திருடப்பட்ட கைத்தொலைபேசி அல்லது இதர பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்கி வைத்திருப்பதும் குற்றமாகும். அதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஒருவருக்குச் சொந்தமில்லாத பொருள் கிடைத்தால், அதை உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது பொலிஸ் அதிகாரியிடமோ ஒப்படைத்து முறையான ரசீதை அவசியமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் புதிய அல்லது பயன்படுத்திய கைத்தொலைபேசிகளை வாங்கும்போது, ‘I Need’ இணையத்தளத்தில் உள்ள “Find Genuine Phone” என்ற வசதியின் மூலம், அத்தொலைபேசி திருடப்பட்டதா அல்லது அது குறித்துப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
எனவே, கைத்தொலைபேசிகளை வாங்கும் போது அதன் பின்னணி மற்றும் விற்கும் இடம் குறித்துக் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு இலங்கை பொலிஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.



