தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் செயற்படுகிறோம் – பிமல் ரத்நாயக்க

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்துக்குள் வடக்கு மாகாணத்துக்கு பலமுறை விஜயம் செய்துள்ளார்.தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு தான் நாங்கள் செயற்படுகிறோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
யாழ் மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று வியாழக்கிழமை (18) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நிகழ்வுகளை நடத்தி நாங்கள் வடக்கில் காணிகளை விடுவிக்கவில்லை. காணி பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக நாங்கள் பயன்படுத்தவில்லை. காணிகளை விடுவிப்பதை நாங்கள் அரசியலாக்கவில்லை.
பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் கடந்த காலங்களில் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.பாதுகாப்பு காரணிகளுக்காக பெற்றுக்கொண்ட காணிகளை பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.இதற்கு நிகழ்வு நடத்த வேண்டிய அவசியமில்லை.
காணி விடுவிக்கப்படும் போது அரசாங்கம் அமைதியாக இருக்கும் போது ஒருசிலர் ‘தம்மால் தான் காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்துக்கொள்கிறார்கள்.
வடக்கு மக்கள் தமிழ் அரசியல் கட்சிகளை காட்டிலும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளார்கள். ஆகவே மக்களுக்கு நாங்கள் சேவையாற்றுவோம்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்துக்குள் வடக்கு மாகாணத்துக்கு பலமுறை விஜயம் செய்துள்ளார்.தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு தான் நாங்கள் செயற்படுகிறோம் என்றார்.