இலங்கைபிரதான செய்திகள்
Trending

2026 முதல் புதிய கல்வி சீர்திருத்தம் அறிமுகம்

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 1 மற்றும் தரம் 6 பாடத்திட்டச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல் தொகுப்பு கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளன.

2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தற்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி, அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 1 மற்றும் தரம் 6 பாடத்திட்டச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல் தொகுப்பை கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டது.

புதிய சீர்திருத்தங்களின் கீழ் ஆரம்பக் கல்வி மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதாவது, தரம் 1, 2 முதலாம் பிரதான கட்டம், தரம் 3, 4 இரண்டாம் பிரதான கட்டம் மற்றும் தரம் 5 மூன்றாம் பிரதான கட்டம் என பிரிக்கப்பட்டுள்ளது.

தரம் 1 முதல் 5 வரையான பாடத்திட்டம் தாய்மொழி, ஆங்கில மொழி, இரண்டாம் தேசிய மொழி, கணிதம், சமயமும் விழுமியக் கல்வியும், ஆரம்ப விஞ்ஞானம் மற்றும் சூழல் சார்ந்த நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த அழகியற் கல்வி, சுகாதாரமும் உடற் கல்வியும் மற்றும் பாட இணைச் செயற்பாடுகள் ஆகிய 9 பொது கற்றல் துறைகளின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பப் பிரிவில் தரம் 1, 2, 3 மற்றும் 4 இற்கான பாடசாலை நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், தரம் 5 இற்கான பாடசாலை நேரம் மு.ப. 7.30 முதல் பி.ப. 2.00 வரை இருக்கும்.

தரம் 1 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக தேசிய கல்வி நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட செயற்பாட்டு புத்தகங்கள் (Activity Books) வழங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

இளையோர் இடைநிலைக் கல்வி தரம் 6 முதல் 9 வரை நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அடுத்த ஆண்டு முதல் தரம் 6 இற்காகப் புதிய பாடத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வழிகாட்டல் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தரங்களில் உள்ள அனைத்து மாணவர்களும் 14 கட்டாயப் பாடங்களைக் கற்க வேண்டும். அத்துடன், விளையாட்டுக்கள் மற்றும் சங்கங்களில் பங்கேற்கவும் ஒவ்வொரு குழந்தைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

14 கட்டாயப் பாடங்களும் மட்டுக்கள் (Modules) மூலம் கற்பிக்கப்பட எதிர்பார்க்கப்படுகிறது. பாடங்களுக்கு ஏற்ப, ஒரு தவணையில் கற்க வேண்டிய மட்டுக்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

தரம் 6 முதல் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், வாழ்க்கைக்கான தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு மற்றும் நிதிசார் கல்வியறிவு ஆகிய மூன்று புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

இளையோர் இடைநிலைப் பிரிவில் பாடசாலை நேரம் மு.ப. 7.30 முதல் பி.ப. 2.00 வரை இருக்கும். அத்துடன், 50 நிமிடங்கள் கொண்ட 7 காலப்பகுதிகள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, 2027 ஆம் ஆண்டு முதல் முன்பள்ளிகளுக்காக ஒரே பாடத்திட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான பாராளுமன்ற உபகுழு நேற்று பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

ஆரம்பகால குழந்தைப் பருவத்திற்கான பாடத்திட்டக் கட்டமைப்பு தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 19,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியாளர்களின் பயிற்சித் திட்டம் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதன்போது, எந்தவொரு பாடசாலையும் மூடப்படாது என்றும், பாடசாலைகளை ஒன்றிணைத்து அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் கொள்கை என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker