மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் அமைச்சுடன் கலந்துரையட முடிவு : தேர்தல்கள் திணைக்களம் !

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சுடன் கலந்துரையாட உத்தேசித்துள்ளோம். அத்துடன் சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளோமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மாகாண சபைத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். சுதந்திரமானதும், நீதியானதுமான முறையில் தேர்தலை நடத்துவற்குரிய சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் தேர்தலை நடத்துவோம். ஜனாதிபதித் தேர்தல்,பொதுத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலை அடுத்தடுத்து நடத்தினோம்.
சட்ட சிக்கலினால் தான் மாகாண சபைத் தேர்தல் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கடந்த கால அரசாங்கங்கள் மேற்கொண்ட சகல முயற்சிகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஒத்துழைப்வை வழங்கியுள்ளோம். அதேபோன்று தேர்தல் முறைமை தொடர்பிலும் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளோம்.
தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். சகல தரப்பினரும் பிரதிநித்துவம் கொள்ளும் வகையில் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சுடன் கலந்துரையாட உத்தேசித்துள்ளோம். அத்துடன் சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடவுள்ளோம். மாகாண சபைகளின் நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளால் செயற்படுத்தப்பட வேண்டும்.
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு சகல அரசியல் கட்சிகளும் பொது கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும்.சகல தரப்பினருடன் வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளோம் என்றார்.