டித்வா புயலால் 81 000 ஆயிரம் வீடுகள் சேதம் 635 பேர் பலி, 192 பேரைக் காணவில்லை

தென்கீழ் பருவ பெயர்ச்சி காலநிலை வலுவடைந்து வருவதால் எதிவரும் தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடி மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு மழைவீழ்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை திறக்க வேண்டியேற்படும் என்பதால், தற்போது அவை சிறியளவில் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த வாரம் முழுவதும் நிலவிய சீரற்ற காலநிலையால் நேற்று திங்கட்கிழமை மாலை வரை 635 பேர் உயிரிழந்துள்ளதோடு, 192 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை 512 123 குடும்பங்களைச் சேர்ந்த 1, 766, 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5325 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 81 163 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. எனினும் தற்போது இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து வருகிறது. அந்த வகையில் 22 218 குடும்பங்களைச் சேர்ந்த 69 861 பேர் 690 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ள.
காலநிலை
நாடளாவிய ரீதியில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்ககப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மழை நிலைமை
பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கோந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிலாபத்திலிருந்து புந்தனம் மற்றும் காங்கோந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.
கடல் நிலை
சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் காங்கோத்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓhளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை, காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கண்டியில் ஹதரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பஹஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே கோரள, தெல்தோட்டை, பூஜாபிட்டிய, கங்கா இஹல கோரள, பன்வில, கங்வத்த கோரள, உடபலாத்த, ஹரிஸ்பத்துவ, குண்டசாலை, மினிப்பே, தொலுவ, தும்பனை, அக்குரனை, உடுநுவர மற்றும் பஹததும்பர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலையில் கேகாலை, கலிகமுவ, மாவனல்ல, புளத்கொஹூபிட்டிய, அரநாயக்க, ஹட்டியாந்தோட்டை, ரம்புக்கனை மற்றும் வரகாலப்பொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், குருணாகலில் மாவத்தகம, மல்லவபிட்டி மற்றும் ரிதீகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மாத்தளையில் நாவுல, வில்கமுவ, பல்லேபொல, அம்பன்கங்க கோரள, லக்கல பல்லேகம, உக்குவெல, ரத்தோட்டை, மாத்தளை மற்றும் யட்டவத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



