இலங்கை

கலைஞர்களை ஊக்குவிப்பதே கலாசார வளர்ச்சியின் அடித்தளம் – மேனகா புவிக்குமார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் தேசகீர்த்தி ஏ.எல். தௌபீக் (JP) அவர்கள், இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் அரவணைத்துச் செயற்படும் அர்ப்பணிப்புமிக்க அதிகாரி என கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் பாராட்டுத் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றத்தின் ஏற்பாட்டில்(17), தேசகீர்த்தி ஏ.எல். தௌபீக் (JP) அவர்களைக் கௌரவிக்கும் விழாவும் கலை நிகழ்வும் நடைபெற்றது.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.சி.எம். ஜுவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றத்தின் போசகர் முக்கலாம் அப்துல் ஸமத் ஆலிம் அப்துல் மஜீத் (மக்கத்தார் ரஹ்) மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளரும் சட்டத்தரணியுமான எம்.வை. ராஷிக் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டதுடன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மொழித்துறை விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக் விசேட உரையாற்றினார்.

பிரதம உரையாற்றிய திருமதி மேனகா புவிக்குமார், கலாசார உத்தியோகத்தர் தௌபீக் அவர்கள் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரிய மரபுகளைப் பாதுகாத்து வளர்க்கும் பணியில் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

தனது பதவியை நிர்வாகப் பொறுப்பாக மட்டுமன்றி, கலைஞர்கள், இலக்கியவாதிகள் மற்றும் கலாசார அமைப்புகளை ஒருங்கிணைக்கும் சமூகப் பணியாகக் கருதி செயற்பட்டு வருவது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.

தௌபீக் அவர்கள் இன, மத வேறுபாடுகளின்றி அனைத்து சமூகங்களுடனும் இணைந்து செயற்படும் பண்பாளர் என்றும், அவரது ஆளுமை, நிர்வாக அனுபவம் மற்றும் பணித்திறன் இளம் உத்தியோகத்தர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்தின் பன்முக கலாசார அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளையும் படைப்பாற்றல் மிக்க முயற்சிகளையும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதில் தௌபீக் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது என்றும், மாவட்ட மட்டத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் அவரது அயராத உழைப்பு முக்கிய பங்காற்றி வருவதாகவும் பாராட்டினார்.

தேசகீர்த்தி ஏ.எல். தௌபீக் அவர்களின் சேவைகளைப் பாராட்டிய அவர், எதிர்காலத்திலும் கலை, கலாசார மற்றும் பாரம்பரிய வளர்ச்சிக்காக மேலும் பல சாதனைகளைப் படைத்து சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நிகழ்வின் நிறைவில் தேசகீர்த்தி ஏ.எல். தௌபீக் (JP) அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், கிழக்கு மாகாண கலாசார திணைக்கள பணிப்பாளர் மேனகா புவிக்குமார் அவர்களுக்கும் பாராட்டுப் பத்திரம், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

( ஜீ + மின்மினி மின்ஹா )

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker