இலங்கைபிரதான செய்திகள்
Trending

கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் – ஜனாதிபதி

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்த, முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துடன் இன்று புதன்கிழமை (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

தற்போதுள்ள சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, தேசிய கல்வி நிறுவகத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பின் மூலம், கல்வி மறுசீரமைப்புகளை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்களை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் (FUTA) இங்கு எடுத்துக்காட்டினர்.

புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கான தேவையை தமது சங்கம் ஏற்றுக்கொள்வதாகவும், நகர்ப்புற பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளை விட கிராமப்புற பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளுக்கு புதிய கல்வி மறுசீரமைப்புகள் தேவைப்படுவதாகவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

கல்விச் மறுசீரமைப்புகளில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எடுத்த முடிவைப் பாராட்டுவதாகவும், அதற்காக தமது ஆதரவுகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேலும் தெரிவித்தனர். இதற்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக, பல்கலைக்கழக கட்டமைப்பில் விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் உள்ளிட்ட பரிந்துரைகளும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன.

பல்கலைக்கழக கட்டமைப்பு மற்றும் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பல்கலைக்கழக சட்டத்தின் திருத்தம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

கடந்த கால அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பின்னர், நாட்டின் பொருளாதார பாதுகாப்பு, அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கருத்தில் கொண்டு, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது செயற்திறனாக நடைமுறைப்படுத்தி வருவதாக இங்கு தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இதற்காக ஆதரவு வழங்குமாறும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பி.ஆர். வீரதுங்க, உப தலைவர் எம்.ஏ.எம். சமீம், செயலாளர் சாருதத்த இளங்கசிங்க உள்ளிட்ட சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker