ஆலையடிவேம்பு பிரதேச உள்ளக நிறுவனங்களுக்கிடையிலான டெங்கு நோய் தடுப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று….

இவ் ஆண்டுக்கான பருவமழை தற்போது ஆரம்பித்திருப்பதால், இதனைத் தொடர்ந்து பிரதேசத்தில் எதிர்நோக்கும் டெங்கு நோய் பரவக்கூடிய அபாய நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை ஆராய்வதற்கான கலந்துரையாடல் இன்றைய தினம் (28) காலை 10.30 மணியளவில் ஆலையடிவேம்பு, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வு ஆலையாடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூஸா நக்பர் தலைமையில் இடம்பெற்றதுடன் இதில் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது ஆலையாடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூஸா நக்பர் அவர்கள் விஞ்ஞான ரீதியான தரவுகளை முன்வைத்து பிரதேசத்தில் டெங்கு நோயின் பரவல், அதன் தீவிரத் தன்மை, விளைவுகள் மேலும் டெங்கு கட்டுப்பாட்டு தொடர்பாக அடுத்துவரும் நான்கு மாதங்களிற்கான டெங்கு கட்டுப்பாட்டு செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்திருந்தார்.
கலந்துகொண்டிருந்த அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் தங்கள் ஆலோசனைகள் மற்றும் தங்கள் அமைப்பினால் வழங்கக்கூடிய பங்களிப்புகள் தொடர்வாகவும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.



