ஆலையடிவேம்பு

புதிய வகை கொரோனா வைரஸ் காற்றிலும் பரவக்கூடியது- முகக்கவசம் இன்றி வெளியில் நடமாடுவோர் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படுவர்: ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன்

வி.சுகிர்தகுமார்  

புதிய வகை கொரோனா வைரஸ் காற்றிலும் பரவக்கூடியதுடன் சுமார் ஒன்றரை மணித்தியாலம் உயிர் வாழக்கூடியது என அறிய முடிகின்றது. ஆகவே இனிவரும் நாட்களில் மக்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் இன்று பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் அவசரமாக ஒன்று கூடிய பிரதேச கொரோனா தடுப்பு செயலணிக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இக்கூட்டத்தில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர், கணக்காளர் க.பிரகஷ்பதி பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் இராணுவ அதிகாரி தயானந்த ஆரியதாச மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொலிசார் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

இதன்போது உரையாற்றிய பிரதேச செயலாளர் கொரோனாவின் தாக்கம் சற்று உயர்வடைந்துவரும் நிலையில் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் அனைவரது கருத்துக்களையும் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இங்கு கருத்து தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தற்போது உருவாகியுள்ள வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் மாத்திரமே நமது பிரதேசத்தை பாதுகாக்க முடியும் என்றார். மேலும் ஆலயங்களின் நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்களும் கொள்வனவு செய்வோரும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கையினை பேண வேண்டும் என்றார்.

 

ஆயினும் கொவிட் சட்டத்தை மீறுவோர்க்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் முகக்கவசம் இன்றி வெளியில் நடமாடுவோர் பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படுவர் எனவும் குறிப்பிட்டார்.

இதேநேரம் கருத்து தெரிவித்த பிரதேச சபை தவிசாளர் ஒலிபெருக்கி மூலமாகவும் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் மூலமும் மக்களை தெளிவூட்டும் தமது நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில் இராணுவமும் பொலிசாரும் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக கூறினர். ஆயினும் மதுபானசாலை உள்ளிட்ட மக்கள் அதிகமாக ஒன்று கூடும் இடங்கள் தொடர்பில் கண்காணிக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

நிறைவாக பிரதேச செயலாளர் கடந்த காலம் மட்டுமன்றி நிகழ்காலத்திலும் கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கி வரும் அனைத்து திணைக்களங்கள் உள்ளிட்டவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker