4 தோல்விகள் அடைந்தும் பிளேஆஃப்புக்குத் தகுதி!

கடைசி 4 ஆட்டங்களில் தோல்வியடைந்தாலும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது.
2016 இல் லீக் சுற்றின் முடிவில் 2 ஆம் பிடித்து பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது.
2018 இல் 6 ஆம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் எனக் கடந்த 3 வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதை அடுத்து, அந்த அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டார்கள்.
அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டார்கள். 5 முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் 3 முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ஆர்சிபி அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை.
இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியின் பிளேஆஃப்புக்கு ஆர்சிபி அணி தகுதி பெற்றுள்ளது.
அபுதாபியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்ட்கள் அடித்து வென்றது.
இந்த ஆட்டத்தில் மட்டுமல்ல கடைசி 4 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோற்றிருக்கிறது ஆர்சிபி அணி. எனினும் கைவசம் 14 புள்ளிகளைக் கொண்டுள்ளதால் பிளேஆஃப்புக்கு தகுதியடைந்துள்ளது. கடைசியாக கொல்கத்தாவுக்கு எதிராக அக்டோபர் 21 அன்று 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதன்பிறகு சென்னை, மும்பை, ஹைதராபாத், தில்லி ஆகிய அணிகளிடம் வரிசையாகத் தோற்றுள்ளது.
10 ஆட்டங்களின் முடிவில் 14 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்திருந்த ஆர்சிபி அணி, 14 ஆட்டங்களின் முடிவிலும் 14 புள்ளிகளே பெற்றுள்ளது. நல்லவேளையாக இதர அணிகளும் கடைசிக்கட்டத்தில் மோசமாக விளையாடியதால் ஆர்சிபி அணியால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடிந்துள்ளது. முக்கியமாக பஞ்சாப் அணி கடைசி இரு ஆட்டங்களிலும் தோற்றது ஆர்சிபி போன்ற இதர அணிகளுக்கு வசதியாக அமைந்துவிட்டது.
எனினும் ஐபிஎல் கிண்ணத்தை வெல்ல அடுத்து தொடர்ச்சியாக 3 ஆட்டங்களை ஆர்சிபி அணி வென்றாக வேண்டும். புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்காததால் இரு வெற்றிகளைத் தொடர்ச்சியாகப் பெற்றால் மட்டுமே இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியும். இனிமேல் அதிர்ஷ்டம் ஆர்சிபி அணிக்குக் கை கொடுக்காது.