ஹொங்கொங் எதிர்ப்பு பேரணிகள் அமெரிக்க – சீன வர்த்தகத்தை பாதிக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய திருத்த சட்டமூல விவகாரத்தில் சீன அரசாங்கம் வன்முறையை கையாண்டால் அது அமெரிக்க – சீன நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹொங்கொங்கில் குற்றவியல் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டமூலத்தில் திருத்தம் கொண்டு வர ஹொங்கொங் நிர்வாகம் தீர்மானித்திருந்தது.
கைதிகள் பரிமாற்ற சட்டமூலத்தை முழுமையாக ரத்து செய்யுமாறு கோரியே பல நாட்களாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், போராட்டக்காரரகள் மீது வன்முறையை கையாண்டால் அமெரிக்க – சீன வர்த்தக ஒப்பந்தங்கள் கடுமையாக பாதிக்கப்படும், என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வௌியிட்ட அவர், “சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மிகவும் திறமை வாய்ந்த ஒரு தலைவர், அவர் ஹொங்கொங் விவகாரத்தில் வன்முறையை கையாளாமல் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவார் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.