ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று மாபெரும் டெங்கொழிப்பு சிரமதானப்பணிகள்…

வி.சுகிர்தகுமார்
நாட்டில் டெங்கு நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
பொதுமக்களின் குடியிருப்புக்கள் மாத்திரமின்றி அரச திணக்களங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பொது இடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் டெங்கொழிப்பு சிரமதானங்களை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவினரின் மூலமாக அறிவுறுத்தல்களையும் வழங்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று மாபெரும் சிரமதானப்பணிகள் பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகரின் தலைமையில் அவரது அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்ளப்பட்டது.
அலுவலகத்தில் உள்ள பிரிவுகள் ரீதியாக பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டு சிரமதானப்பணிகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் பிரதேச செயலகத்தை சூழவிருந்த பல்வேறு பகுதிகளிலுமிருந்த குப்பை கூழங்கள் அகற்றப்பட்டதுடன் டெங்கு பரவக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் சிரட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் யாவும் தீயிட்டு எரிக்கப்பட்டன.
மேலும் பிரதேச செயலக சூழலை அழகுபடுத்தும் வகையிலான வேலைத்திட்டமும் மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டது.
இச்சிரமதானப்பணியில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் வருமுன் காப்போம் எனும் முதுமொழிக்கேற்ப மக்கள் செயற்பட வேண்டும் என ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
தற்போது டெங்குவின் தாக்கம் காணப்படாத போதிலும் அதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக கூறினார்.
ஆகவே மழை ஆரம்பிக்க முன்னர் மக்கள் தங்களது சுற்றச்சூழலை துப்பரவு செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்வது கட்டாயமானது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.