இலங்கை

மனித உரிமைகள் இல்லத்தின் ஸ்தாபகர் சேவியரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளில் “கண்ணீர்களின் சோலை” திறப்பு.

மனித உரிமைகள் இல்லத்தின் (Home for Human Rights) ஸ்தாபகர் ஐ. எப். சேவியரின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவாக உருவாக்கப்பட்ட “கண்ணீர்களின் சோலை” நினைவிடம் கடந்த (10) புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளையில் திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

“கடந்த காலத்தை நினைவில் கொண்டு, எதிர்காலத்தைப் பாதுகாப்போம்” என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ள கண்ணீர்களின் சோலை, போரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நினைவகமாகவும் உளவள ஆற்றுப்படுத்தல் இடமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது
நிகழ்வின் ஆரம்பத்தில் 2016 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி காலமான ஐ. எப். சேவியருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சமூக நீதிக்கும் மனித உரிமைகளுக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில் “நினைவுக் கல்”திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து கண்ணீர்களின் சோலையின் பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டதுடன், அதன் மையத்தில் அமைந்துள்ள நினைவுக் கட்டமைப்பைச் சுற்றி விளக்கேற்றி நினைவிடம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது அன்புக்குரியவர்களின் நினைவாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்கள் மரக்கன்றுகளை நட்டனர். இந்த மரங்கள் உண்மைக்கான தேடல், நீதிக்கான போராட்டம் மற்றும் நம்பிக்கையின் அடையாளங்களாக அமைகின்றன என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, உளவியல் மற்றும் சட்டரீதியான சவால்களை பிரதிபலிக்கும் நாடக நிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட்டதுடன்
நினைவு, உண்மை மற்றும் நீதிக்கான தேடலை தொடர்ந்து முன்னெடுக்கும் உறுதியின் வெளிப்பாடாக “கண்ணீர்களின் சோலை” அமைகிறது என நிகழ்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker