இலங்கைபிரதான செய்திகள்
Trending

இயல்பு வாழ்வை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டு பொறிமுறை அவசியம் – ஜனாதிபதி

அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (06) முற்பகல் நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் அவசர திட்டங்களின் முன்னேற்றத்தை இதன்போது ஜனாதிபதி தனித்தனியாக மீளாய்வு செய்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீதிக் கட்டமைப்பு நிரந்தரமாக அமைக்கப்படும் வரை, அடுத்த 25 நாட்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, வீதிப் புனரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் நீர் விநியோகத்தை 03 நாட்களுக்குள் முழுமையாக வழமைக்கு கொண்டுவருமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அதுவரை மக்களின் நீர் தேவைகளை பவுசர்கள் மூலம் பூர்த்தி செய்யுமாறும், இந்த நடவடிக்கைகளில், வழக்கமான செயல்முறைக்கு அப்பால் சென்று, அவசரநிலையாகக் கருதி, முப்படையினரிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளைப் பெறுமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், வீடுகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை பிரதேச செயலகங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள அறிவுறுத்திய ஜனாதிபதி, பாரிய சீரமைப்பு பணிகளை இரண்டாம் கட்டத்தில் மேற்கொள்ளும் அதே வேளை, டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் தற்காலிக பழுதுபார்ப்பு மூலம் மாவட்டத்தில் மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியுமான விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் பயிரிடக்கூடிய விவசாய நிலங்களின் அளவை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.150,000 இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மரக்கறி பயிர்ச் செய்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெற்று, அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஹெக்டெயாருக்கு 200,000 ரூபா இழப்பீட்டை வழங்கவும், மரக்கறி பயிர்ச் செய்கைக்கு வழங்கப்படும் அதே இழப்பீட்டுத் தொகையை வாழை பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு வழங்கக்கூடிய வகையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

கால்நடைத் துறைக்கு அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பண்ணைகளின் அளவு மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை குறித்த புதுப்பித்த தரவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

அழிக்கப்பட்ட கால்நடை பண்ணைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கும், அவர்களின் வருமானத்தை மீட்டெடுப்பதற்கும், பால், கோழி, முட்டை உள்ளிட்ட நாட்டின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி விளக்கினார்.

மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், வீதிகள் சேதமடைந்துள்ளதால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ள புஸ்ஸெல்ல மற்றும் மீதலாவ பகுதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை, முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் இன்று மாலைக்குள் எரிபொருள் விநியோகத்தை சீர்படுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

மேலும், கண்டி மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதற்கு பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள கால இடைவெளியைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

மாவட்டத்தில் சுகாதாரம், புகையிரதப் பாதைகள் மற்றும் தொடர்பாடல் வசதிகளை மீளமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் அந்த மக்கள் மீளக் குடியேறுதல் தொடர்பான நடவடிக்கைகளில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வகிபாகம் மற்றும் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மக்களை மீளக் குடியேற்றுவதற்காக அருகிலுள்ள அரச காணிகளை அடையாளம் கண்டு சமர்ப்பிக்குமாறும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி அந்தக் காணிகளை விடுவிப்பதற்குத் தேவையான தலையீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மக்களை மிகவும் பாதுகாப்பாக மீளக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், முற்றாக அழிக்கப்பட்ட மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு அந்த நோக்கங்களுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்த இழப்பீடுகளின் பகுதியளவு வழங்கப்படும் என்பதால், வழங்க முடியமான இழப்பீட்டுத் தொகைகள் அனைத்தையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கி முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சுமையாக இருக்கக் கூடாது என்றும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்களை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியம் என்று தெரிவித்தார்.

கம்பளை பிரதேசத்தில் குப்பை அகற்றும் பிரச்சினை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், நீண்டகாலத் தீர்வாக மகாவலிக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படும் வரை, மின்சார சபைக்குச் சொந்தமான காணிகளை தற்காலிகமாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அனர்த்தம் காரணமாக அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்ளைத் தடுக்க முடியாவிட்டாலும், உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதங்களைத் தடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மத்திய மலைநாட்டைப் பற்றிய முறையான ஆய்வு நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டு வரும் மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற பேரழிவுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க பிரதேச சபைகளின் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்காலத்தில் அனுமதிக்கப்படாத நிர்மாணங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், அத்தகைய இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாமல் இருப்பதை மின்சார சபை உறுதி செய்ய வேண்டும்.

அனர்த்தத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுக்கும் என்று சிலர் எதிர்பார்த்த போதிலும், மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும், இன்னும் சிறிது காலம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். இந்த நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் மற்றும் முப்படையினரின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி விசேடமாக பாராட்டினார்.

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, சுகாதார பிரதி அமைச்சர் முதித ஹன்சக விஜேமுனி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் மனுவர்ண, தனுர திசாநாயக்க ரியாஸ் மொஹமட், மொஹமட் பஸ்மின், துஷாரி ஜயசிங்க உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பிரதம செயலாளர் ஜி.எச்.எம்.ஏ. பிரேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்சன சூரியப்பெரும உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள், கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மின்சார சபை, நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறை சார் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker