இலங்கை
Trending

10 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது! காரைதீவில் சம்பவம்

– பாறுக் ஷிஹான் –

பிணை பெற்றுத்தருவதாக கூறி நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தரை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 32 வயது மதிக்கத்தக்க பொலிஸ் உத்தியோகத்தர் தன்னிடம் ரூபா 10 000 இலஞ்சம் கோருவதாக பொது போக்குவரத்து செயற்பாட்டில் ஈடுபட்ட நபர் அண்மையில் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனடிப்படையில் ஆணைக்குழு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான வியாழக்கிழமை(11) மாலை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கூறியமைக்கு அமைவாக இலஞ்சப் பணத்தை காரைதீவு பொலிஸ் நிலையத்தில் வைத்து அந்நபர் வழங்கியுள்ளார்.

இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்ச பணத்தை வாங்கும் போது கைது செய்தனர்.

மேலும் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவில் பொதுபோக்குவரத்து செயற்பாட்டில் ஈடுபட்ட சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த நபரிடம் இருந்து வாகனசாரதி அனுமதிபத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்யாமல் அவற்றை மீள தருவதற்கு குறித்த பொலிஸ்உத்தியோகத்தர் அந்த நபரிடமிருந்து ரூபா 10000 இலஞ்சம் கோரியிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன் கைதான சந்தேகநபரை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(12) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker