ஆறாவது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு போராட்டம்!

தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடர்கிறது.
மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
இதேவேளை, நேற்றையதினம் (22) தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்துக்கு முன்னால் சத்தியாகிரக போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தது.
இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட நிலையம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இந்த சத்தியாகிரகத்தில் இணைந்துக்கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டம் காரணமாக, நேற்று காலை முதல் மத்திய தபால்பரிவர்த்தனை நிலையத்தைச் சுற்றி விசேட பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
பொதிகளை அனுப்பத் தயாராகும் ஊழியர்களின் கடமைகளுக்கு சில குழுக்கள் இடையூறு விளைவித்ததை அடுத்து, பொலிசார் குறித்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
19 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு தொடங்கிய பணிப்புறக்கணிப்பு இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது.
இதேவேளை, பணிக்கு வராத அனைத்து அஞ்சல் ஊழியர்களும் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறியதாகக் கருதப்படுவார்கள் என்று தபால் மா அதிபர் ருவன் சத்குமார் அறிவித்துள்ளார்.
மேலும், குறித்த பணிபுறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் தபால் சேவைகளை அணுகுவதில் குறிப்பிடத்தக்கச் சிரமங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.