
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை இறுதிக்கட்டத்தை அடைந்துவரும் நிலையில் நெல்விலை திடீர் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக மாவட்டத்தில் நிலவிவரும் வெயிலும் இல்லாத, மழையும் இல்லாத மப்பும் மந்தாரமுமான காலநிலையே நெல் விலை வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இம்முறை சிறுபோகத்தில் ரூ. 6900 வரை விற்பனை செய்யப்பட்டுவந்து சிவப்பரிசி நெல் மூடையொன்றின் தற்போதைய விலை 6500 ரூபாவாகவும், 6500
ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுவந்த வெள்ளையரிசி நெல் மூடையொன்றின் விலை ரூ. 6200 ஆகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
வெயில் இல்லாத சீரற்ற காலநிலையில் நெல்லை முறையாக உலர்த்தி அரிசியாக்க முடியாத நிலை அரிசி ஆலைகளுக்கு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அதேபோன்று, நெல்லை ஈரப்பதனின்றி உலர்த்தி களஞ்சியப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.
இம்முறை, சிறுபோகத்தில் வெள்ளை அரசி நெல் சாகுபடி செய்தவர்களுக்கு சிறந்த விளைச்சல் கிடைத்துள்ளது. ஏக்கரொன்றுக்கு 135 புசல் வரை உச்சமான அறுவடை கிடைத்துவருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். அதேவேளை,சிவப்பரிசி நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு 100 புசல்வரையே உச்ச விளைச்சல் கிடைத்துவருவதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். சிவப்பரிசி நெல் விளைச்சல் வீழ்ச்சிக்கு அதிகரித்த உஷ;ணம் காரணம் என விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த மாதங்களில் அம்பாறை மாவட்டத்தில் நிலவிய அதிகரித்த வெயில் மற்றும் உஷ்ணக் காலநிலை அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட மஞ்சள் நோய் என்பன விளைச்சல் வீழ்ச்சிக்கு காரணமாக தெரிவிக்கப்படுகின்றது. சிவப்பரிசி நெல் சாகுபடிக்கு அதிகரித்த உஷ்ணக் காலநிலை உகந்ததல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.