இலங்கைபிரதான செய்திகள்
வௌிநாட்டினருக்கான சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வௌியான தகவல்!

ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் திறக்கப்பட்ட கருமபீடம் வழியாக 120 வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற வெளிநாட்டினரிடமிருந்து அதிகளவான கோரிக்கை இருக்கும் நிலையில், அவ்வாறு அனுமதிப்பத்திரத்திரம் வழங்கப்படாது என்றும் அவர் கூறினார்.
“சுற்றுலாவை ஊக்குவிக்கவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைத் தடுக்கவும், ஓகஸ்ட் 3 ஆம் திகதி முதல் இலங்கையில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக அனுமதிகளை வழங்க கருமபீடத்தை திறந்துள்ளோம்.
இது 24 மணி நேரமும் திறந்திருக்கும். கோரிக்கைகள் முன்வைத்தாலும் சில அனுமதிகளை வழங்க முடியாது.
குறிப்பாக முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களை செலுத்த நாங்கள் அனுமதிப்பதில்லை. அத்தகைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன.
வௌிநாட்டினரின் விசா காலத்தின் அடிப்படையில் இரண்டு மாதம் முதல் 5 மாதங்கள் வரை விசா அனுமதிப் பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுப்படியாகும் காலத்திற்கு அமைய தற்காலிக அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், நாங்கள் ஒரு நிரந்தர அனுமதியை வழங்குகிறோம். நாங்கள் விமான நிலையத்தில் அதை வழங்குவதில்லை.
வழக்கம் போல், இது வெரஹெர அலுவலகத்தில் செய்யப்படுகிறது.” என்றார்.
புதிய வாகனங்களை பதிவு செய்வது குறித்தும் கமல் அமரசிங்க தனது கருத்துக்களை வௌியிட்டார்.
“ஜனவரி முதல், நாங்கள் 133,678 வாகனங்களைப் பதிவு செய்துள்ளோம்.
இதில் மிகப் பெரிய எண்ணிக்கை மோட்டார் சைக்கிள்கள் ஆகும், அவற்றில் 100,451 பதிவு செய்யப்பட்டுள்ளன.
அடுத்த பெரிய எண்ணிக்கையாக 20,535 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், லொறிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் போன்ற வாகனங்கள் உள்ளன.
பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம்.” என்றார்.