2025ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஆண்டிலேயே நிறைவடைய வேண்டும்! – ஜனாதிபதி

2025ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஆண்டிலேயே நிறைவடைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இதை தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலின் போது, கடந்த கால பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்குதல், நடைபெற்று வரும் பணிகளில் எழுந்துள்ள சிக்கல்கள் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம் மற்றும் வீட்டுத் திட்டங்களை இந்த ஆண்டிற்குள் நிறைவு செய்ய முடியும் என அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.
அரசாங்கம் தேவையான நிதியை ஒதுக்கியிருந்தாலும், குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்தப்படாதது பிரச்சினையாக உள்ளது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், வீடுகள் மற்றும் நகர்ப்புற கட்டிடங்களை அமைக்கும் போது பகுதி மக்களின் தேவைகள் மற்றும் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முந்தைய ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் பல இடங்களில் பயன்பாடில்லாத கட்டிடங்களாக மாறியுள்ளதையும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்ட 18 பாலம் நிர்மாணத் திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
அத்துடன், சீன மற்றும் இந்திய கடன் உதவியுடன் மேற்கொள்ளப்படும் வீட்டுத் திட்டங்கள், காணி கையகப்படுத்தலின் சட்ட சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, அவற்றிற்கான தீர்வுகளை முன்மொழியுமாறு ஜனாதிபதி பணித்தார்.
இதேவேளை, அரசு வீட்டுத் திட்டங்களில் இதுவரை பயனடையாத மக்களுக்கு, கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஆதரவுடன் புதிய முறைகள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.