ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பரவலான சுனாமி எச்சரிக்கை!

ரஷ்யாவின் தொலைதூர மற்றும் மக்கள் தொகை குறைவாக உள்ள தூர கிழக்கு கடற்கரையில் புதன்கிழமை (30) காலை 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால், ரஷ்யா, ஜப்பான் மற்றும் அலாஸ்காவின் சில பகுதிகளுக்கும், ஹவாய் முழுவதற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கிக்கு தென்கிழக்கே சுமார் 74 மைல் (119 கிலோமீட்டர்) தொலைவில் 20.7 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு வடகிழக்கு ஜப்பானைத் தாக்கிய 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், பேரழிவை ஏற்படுத்திய சுனாமியைத் தூண்டியதிலிருந்து, இந்த நிலநடுக்கம் பூமியில் மிகவும் வலிமையானது.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சுனாமி அச்சுறுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் தெரிவித்துள்ளார்.
கடற்கரையோரங்களில் இருந்து விலகி இருக்குமாறு அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
கம்சட்காவின் யெலிசோவோ மாவட்டத்தில் 3-4 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகளின் எழுச்சி பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பானின் பசுபிக் கடற்கரைக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 10 மணி முதல் 11 மணி வரை 3 மீட்டர் உயர அலைகள் நாட்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடற்கரையிலிருந்து மக்கள் விலகி இருக்குமாறு அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
தேசிய அரச வானிலை சேவையின்படி, ஹவாய் மற்றும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, முதல் அலைகள் உள்ளூர் நேரப்படி மாலை 7:17 மணிக்கு தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை அமுலில் உள்ளது.
கனடா மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைகள் முதல் மெக்சிகோ எல்லை வரை சுனாமி கண்காணிப்பு அமுலில் உள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தின் கடற்கரையிலிருந்து தொலைவில் உள்ளது, இது மக்கள் தொகை குறைவாக உள்ள நாட்டின் தொலைதூரப் பகுதியாகும்.
பசுபிக் பெருங்கடலின் இருபுறமும் சக்திவாய்ந்த நில அதிர்வு மற்றும் எரிமலை செயல்பாடுகளைக் கொண்ட பசிசுக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக கம்சட்கா உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.