பொருளாதார ரீதியில் ஸ்த்திரத்தன்மை அடைந்துள்ள நாட்டை, அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல அரசாங்கம் நடவடிக்கை

பொருளாதார ரீதியில் ஸ்த்திரத்தன்மை அடைந்துள்ள நாட்டை, அடுத்த நிலைக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஆராய்ந்து, அடுத்த கட்ட இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆடைத் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களுடன் இடம் 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ” தற்போதுள்ள கைத்தொழில்களுக்கு வசதிகளை வழங்குவதன் மூலம் முதல் சுற்றில் எதிர்பார்க்கும் முன்னேற்ற இலக்குகளை எட்ட முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன் ஒவ்வொரு ரூபாவையும் அதிக பலன் கிடைக்கும் முதலீடுகளுக்குப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட ஆடைத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆடைத்துறையினர் ஜனாதிபதியிடம்
எடுத்துரைத்தனர்.
அனைத்துத் துறைகளுக்கும் வரிச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் அங்கீகரிப்பதாகவும், வருமான நிலைகளுக்கு அமைவாக நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாத்து எதிர்காலத்தில் அத்தகைய சலுகைகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி
தெரிவித்தார்.
குறிப்பாக ‘பரஸ்பர வரி’ முறையின் கீழ் அமெரிக்காவினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி விகிதத்தைக் குறைக்க அரசாங்கம் தலையிட்டதை கைத்தொழில்துறையினர் பாராட்டியிருந்தனர்.
இதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததோடு எதிர்காலத்தில் இது தொடர்பாக மேலும் சலுகைகளைப் பெற தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆடை
ஏற்றுமதி தொடர்பாக வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயங்களின் போது கவனம் செலுத்துமாறும் கலந்துரையாடலில் பங்கேற்ற பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
தற்பொழுது உற்பத்திகளில் 55 சதவீத பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகள் என்றும், எதிர்காலத்தில் இதனை மேலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக
கைத்தொழிற்துறையினர் தெரிவித்ததோடு அரசாங்கம் இதற்குத் தேவையான வசதிகளை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.