இலங்கைபிரதான செய்திகள்
Trending

புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை – ஹரிணி அமரசூரிய !

புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை என்றும், கல்வி மற்றும் தொழிற் துறைகளில் உயர் கல்வியைத் தொடர பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாண கிறிஸ்தவ இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று (2) நடைபெற்ற வட மாகாண கற்றறிவாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

பாரம்பரிய கல்வி முறைக்குப் பதிலாக, பிள்ளைகள் கல்வி மற்றும் தொழிற் துறைகள் ஆகிய இரண்டு துறைகளிலும் உயர் கல்வியைத் தொடர உதவும் வகையில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மூலம் வரலாறு, சமயம் மற்றும் அழகியல் ஆகிய பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிலர் இன்னும் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இந்த தவறான கூற்றுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை. வரலாறு, அழகியல் அல்லது சமயம் ஆகிய பாடங்கள் எந்த வகையிலும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படவில்லை.

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ், மாணவர் சமூகத்தின் மீது சுமையை ஏற்படுத்தும் கல்விக்கு பதிலாக, பிள்ளைகளுக்கு அழுத்தம் இல்லாமல் கற்றுக்கொள்ளவும், அவர்கள் விரும்பும் பாடங்களை மேலும் கற்பதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தொழிலை தேர்வுசெய்யவும் சரியான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

தொழிற்கல்வியை பாடசாலைக் கல்வியினுள் கொண்டு வந்து, மாணவர்கள் கல்வித்துறை அல்லது தொழிற்கல்வி ஆகிய இரண்டு பாடப் பிரிவுகளிலிருந்தும் தங்களுக்கு மிகவும் பொருத்தமான துறையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

தற்போதைய கல்வி சீர்திருத்தம் ஏற்கனவே தயாரித்து முடிக்கப்பட்ட இறுதி சீர்திருத்தம் அல்ல.

பாடங்கள் தொடர்பான வல்லுநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் நேர்மறையான பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, தேவையானவற்றை இணைத்து, தேவையற்றவற்றை நீக்கி, படிப்படியாக மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் இது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker