பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினர் 15 இலட்சம் ரூபாவை கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கினர்.

வி.சுகிர்தகுமார்
கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினர் 15 இலட்சம் ரூபாவை ஒதுக்கினர்.
கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்று கிழக்கில்; சிறப்புற்று விளங்கும் இவ்ஆலயத்தின் வண்ணக்கர் க.கார்த்திகேசு தலைமையிலான ஆலய நிருவாகத்தினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைவாகவே குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக தலா 1000 ரூபா பெறுமதியான 1500 நிவாரணப்பொதிகள் பெறப்பட்டு பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாக கையளிக்கப்பட்டன.
ஆலய நிருவாகத்தினர் கிராம உத்தியோகத்தர்களின் அலுவலங்களுக்கு நேரடியாக சென்று நிவாரணப்பொருட்களை கையளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பனங்காடு உள்ளிட்ட சில கிராம மக்களுக்கும் நிவாரணப்பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணியில் ஆலய பொருளாளர் கே.பி.ராஜஸ்ரீ நிருவாக உறுப்பினர் பு.நித்தியானந்தன் உள்ளிட்ட நிருவாகத்தினர் கலந்து கொண்டனர்.
குறித்த சமூகப்பணியை சிறப்பாக மேற்கொண்ட ஆலய வண்ணக்கர் உள்ளிட்ட நிருவாகத்தினருக்கும் மழவராயன் குடி மக்களுக்கும் பிரதேச செயலகமும் மற்றும் பொதுமக்களும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
இதேநேரம் பொற்புறா வந்த காவியத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கானது நேற்றையதினம் (01) அம்மன் திருக்கதவு திறக்கும் நிகழ்வோடு ஆரம்பமாகி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) திருக்குளிர்த்தி சடங்குடனும் 06ஆம் திகதி இடம்பெறும் ஐயனார், வைரவர், நாகேஸ்வரர் சடங்குடன் இனிது நிறைவுறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



