யாழ் – மத்தள விமான நிலையங்களுக்கு இடையில் முறுகல்

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் பொதுஜன பெரமுனவினருக்கும் இடையில் போட்டி நிலவி வருகின்றது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இரு கட்சிகளும் இரு சர்வதேச விமான நிலையங்கள் குறித்த வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் மத்தள சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாண விமான நிலையம் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் மட்டுமே புனரமைக்கப்பட்டது. ஏனெனில் ஏற்கனவே அங்கு விமான சேவைகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மையில் சரணாலயம் மற்றும் காட்டுப்பகுதியே காணப்படுகின்றது. குறிப்பாக இந்த விமான நிலையம் இப்போது அவசர தரையிறக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
அத்தோடு இந்த இடத்திற்கு அருகில் உள்ள பெரிய நகரம் மாத்தறை. இது 2.5 மணிநேர தூரத்தில் உள்ளது. குறிப்பாக முழு மாவட்டமும் 96% கிராமப்புறத்தைக் கொண்டது என்பதால் விமான போக்குவரத்துக்கான அவசியம் பெரிதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருக்கும் மக்கள், விமானப் போக்குவரத்துக்காக அங்கிருந்து கொழும்புக்கு 8 மணி நேரங்கள் பயணிக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது.
அத்துடன் வடக்கிற்கும் தென் இந்தியாவிற்கும் இடையில் ஆழமான தொடர்புகள் உள்ளன. எனவே யாழ்ப்பாண விமான நிலையம் அமைக்கப்பட்டமை மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
இருப்பினும் திறக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. ஆனால் எதிர்க்கட்சியினர் தற்போது விமான நிலையம் தரமானதாக இல்லை என்று கூறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சீரற்ற வானிலை காரணமாக தற்போது இந்தியாவில் உள்ள கொச்சி விமான நிலையம், சென்னை விமான நிலையங்கள் கூட வெள்ளத்தில் மூழ்கின. இருப்பினும் இந்த விமான நிலையத்தின் தேவையை வடக்கு மக்கள் உணர்ந்துள்ளனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.