விளையாட்டு

இந்தியா அணிக்கு 420 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து: இந்தியா நிதானம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில், புஜாரா 12 ஓட்டங்களுடனும் சுப்மான் கில் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றி இலக்குடன் ஒப்பிடுகையில், இந்தியா அணி, 381 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை- சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 578 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 218 ஓட்டங்களையும் சிப்ளி 87 ஓட்டங்களையும் ஸ்டோக்ஸ் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், பும்ரா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா மற்றும் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 337 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 91 ஓட்டங்களையும் வொஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களையும் புஜாரா 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், டொம் பெஸ் 4 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன், ஜொப்ரா ஆர்செர மற்றும் ஜெக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 241 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 178 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணிக்கு 420 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது இங்கிலாந்து அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரூட் 40 ஓட்டங்களையும் ஒலீ போப் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், அஸ்வின் 6 விக்கெட்டுகளையும் நதீம் 2 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 420 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ரோஹித் சர்மா 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஜெக் லீச் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

இன்னமும் ஒருநாள் மற்றும் 9 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், 381 என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்தியா அணி, நாளை களமிறங்கவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker