
இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது அமெரிக்கா வரிகளை விதிக்காது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (11) தெரிவித்தார்.
இந்த அறிவிப்புடன் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது சரிந்தது.
அமெரிக்காவில் மிகவும் பரவலாக வர்த்தகம் செய்யப்படும் தங்கக் கட்டிகளை வொஷிங்டன் நாடு சார்ந்த இறக்குமதி வரிகளின் கீழ் கொண்டுவரக்கூடும் என்றும், இது உலோகத்தின் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை பாதிக்கும் என்றும் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு கடந்த வெள்ளிக்கிழமை தனது வலைத்தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் திங்களன்று தனது சமூக ஊடகப் பதிவில் ட்ரம்ப், “தங்கத்திற்கு வரி விதிக்கப்படாது!” என்று பதிவிட்டார்.
இந்த அறிவிப்பினை உலகளாவிய தங்கச் சந்தைகள் வரவேற்றன.
மேலும், இது மஞ்சள் உலோகம் உலகளாவிய வர்த்தகப் போரில் சிக்கிக் கொள்ளக்கூடும் என்ற பல நாள் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அதேநேரம் ட்ரம்பின் பதிவிற்குப் பின்னர் நியூயோர்க்கில் திங்கட்கிழமை (11) பிற்பகல் வர்த்தகத்தில் ஸ்பாட் தங்கத்தின் விலை 1.2 சதவீதம் சரிந்து ஒரு அவுன்ஸ் $3,357 ஆக இருந்தது.
அதே நேரத்தில் அமெரிக்க தங்க எதிர்காலம் சுமார் 2.5 சதவீதம் சரிந்து $3,407 ஆக இருந்தது.
இதேவேளை, கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (12) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 270,000 ரூபாவாக காணப்படுகிறது.
அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 248,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.