
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
இது தொடர்பாக கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் மோதலின் பின்னணியில் உருவாகியுள்ள பொருளாதார தாக்கங்களை சமாளிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விரிவாக விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போது, எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள திட்டங்களை ஜனாதிபதி விளக்கியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, மத்திய கிழக்கு நிலைமையால் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் உருவாகும் என்ற அச்சம் நிலவிய நிலையில், QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், வாகன எண் தகடுகள் மற்றும் திகதிகளின் அடிப்படையில் ‘ஒற்றை, இரட்டை இலக்க முறையின் கீழ் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், எரிவாயு விநியோகமும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு போதுமான அளவு கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அத்தியாவசிய பொருட்களின் கிடைப்பை உறுதிப்படுத்துதல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி தனது உரையில் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அவசர நடவடிக்கைகள் குறித்து இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



