இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட்: மாற்றம் கலந்த வலுவான இலங்கை அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான 16பேர் கொண்ட இலங்கை அணியில், கடந்த சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற 5 பேர் கொண்ட அணியிலிருந்து சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாமல் இருந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
எனினும், இறுதியாக சொந்த மண்ணில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், குசால் பேரேராவுக்கு வலது கையின் நடுவிரலில் காயம் ஏற்பட்டது.
அவரது காயம் குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால், அவர் இத்தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல, கடந்த சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த லஹிரு திரிமன்னே அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு வீரரான வனிந்து ஹசரங்காவுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் குணமடைய குறைந்தது நான்கு வாரங்கள் ஆகும் என்பதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரும் விளையாட வாய்ப்பில்லை.
இடது கை சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரரான இவர் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயத்தால் அவரது அறிமுக டெஸ்ட் போட்டி தள்ளிப்போகியுள்ளது.
மேலும், உபாதையிலிருந்து மீண்டுள்ள துடுப்பாட்ட சகலதுறை வீரர் தனன்ஜய டி சில்வா அணிக்கு திரும்பியுள்ளார்.
அண்மைக்காலமாக முதல்தர போட்டிகளில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திவரும் ரொஷேன் சில்வா தொடர்ந்தும் தேர்வாளர்களினால் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
திமுத் கருணாரத்ன தலைமையிலான அணியில், ஒசேத பொனார்டோ, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால், குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெனார்டோ, கசுன் ராஜித, தில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய லக்ஷான் சந்தகென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது.