
இலங்கையில் சிறுவர் தொழிலாளர் விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 1956 ஆம் ஆண்டு மகளிர், இளைஞர்கள் மற்றும் சிறுவர் வேலைவாய்ப்புச் சட்டம் இல. 47 இல் உள்ள அபராதங்களை திருத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இந்தச் சட்டம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்கிறது. மேலும், 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் உடல்நலம், பாதுகாப்பு அல்லது ஒழுக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அபாயகரமான தொழில்களில் ஈடுபடுவதை தடை செய்து, அவர்களின் வேலைகளை ஒழுங்குபடுத்துகிறது.
தற்போது, இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 10,000 அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நஷ்டஈடும் வழங்க வேண்டும். இந்த அபராதத் தொகை போதுமானதாக இல்லை என்று தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, இலங்கை அங்கீகரித்துள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 138 மற்றும் 182ஆவது மாநாடுகளுக்கு இணங்க அபராதங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.