சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து அவதானம்!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடல் இன்று (31) நாடாளுமன்றத்தல் நடைபெற்றது.
இதன் போது, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் குழுவும், பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக நாடாளுமன்ற அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், இதுவரை எம்.பி.க்கள் விடுத்த அனைத்து பாதுகாப்பு கோரிக்கைகளும் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கத்தால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், இன்று வரை பெறப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக தனது கடமைகளை நிறைவேற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு ஏற்கனவே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விடுத்த கோரிக்கைகள் குறித்து சபாநாயகர் இன்று பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
தனது கருத்துக்களைத் தெரிவித்த பொலிஸ்மா அதிபர் இந்தக் கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதி மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்குத் தெரிவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறினார்.
இந்தக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சியின் தலைமை கொறடா, நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக, பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புத் தேவைகள் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவும் நேர்மறையான பதில்களை அளித்ததாகக் கூறினார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலைகள் காரணமாக மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகரிடம் ஒரு கூட்டத்தை நடத்துமாறு கோரியதை அடுத்து, இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நியாயமான பதிலை வழங்குவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நம்பிக்கை தெரிவித்தார்.
 
				 
					



