டொனால்ட் ட்ரம்ப் வைத்தியசாலையில் அனுமதி

கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்பும் நேற்று வெள்ளிக்கிழமை கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
அதில் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா என இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஜனாதிபதி ட்ரம்ப் அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய இராணுவ வைத்தியசாலையில் தற்போது (அக்டோபர் 3) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன் வெள்ளைமாளிகையில் வைத்து ஜனாதிபதி ட்ரம்ப் தனது உடல்நிலை தொடர்பான தகவல்களை காணொளியை அதிகாரப்பூர்வ டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
தனது உடல்நிலை தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள காணொளியில் ,
‘எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் வால்டர் ரேட் ராணுவ மருத்துவமனைக்குசெல்ல உள்ளேன்.
நான் நலமுடன் தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனாலும், அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்யவே மருத்துவமனை செல்கிறேன்.
மெலினியாவும் சிறப்பாகவே உள்ளார். உங்கள் ஆதரவுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் இதை மறக்கமாட்டேன்… நன்றி’ என தெரிவித்துள்ளார்.