கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் அரசு எடுத்திருக்கும் தீர்மானத்தினை தமிழ் மக்களான நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் – கோடீஸ்வரன் MP

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அவ்வாறு ஒன்றாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படுவதை தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை விடயத்தில் அதற்கென தனியாக 30 வருடங்களாக பிரதேச ஒருங்கிணைப்பு தலைவர் நியமிக்கப்பட்டிருந்தார். இப்போது பிரதி அமைச்சர் வசந்த பியதிச நியமிக்கப்பட்டுள்ளார். இது வரவேற்கதக்க விடயமே. ஆனால் இன்று வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு கூட்டம் இதுவரை நடைபெறவில்லை.
கல்முனை பிரதேச செயலகத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தையும் சேர்த்து ஒரு ஒருங்கிணைப்பு குழு கூட்டதை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயமாகும்.
இவ்வளவு காலமும் நடந்த இரண்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டத் நிறுத்தி விட்டு இப்போது இரண்டு பிரதேச செயலகங்களை சேர்த்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நடத்துவது ஆரிய மோசடிக்கு தள்ளப்படக்கூடிய மற்றும் பெரிய பிளவுக்கு தள்ளப்படக்கூடிய காரணமாக இருக்கப் போகின்றது.
மீண்டும் மீண்டும் இவ்வாறான பிளவுகள் ஏற்படுவதற்கு இந்த அரசாங்கம் காரணமாக இருக்கக் கூடாது. நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் இந்த வடக்கு பிரதேச செயலகம் ஊடாகவே இடம்பெற்று வந்தது. இப்போது இரண்டையும் சேர்த்து இரண்டு சமூகங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்கள்.
அங்கு தேசிய மக்கள் சக்தியினருக்கு அதிக அளவில் வாக்குகளை வழங்கி இருந்தனர் ஆனால் இன்று அந்த தமிழர்கள் வெட்கி தலைகுனிந்து இருக்கின்றார்கள். தலைவரை நியமித்தும் அந்தப் பிரதேச செயலக குழு கூட்டங்கள் நடைபெறாமல் இருக்கின்றது.
இதை நாங்கள் எதிர்க்கின்றோம் வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கை வரலாற்றில் எப்போதும் நடக்காத வகையில் நீங்கள் இரண்டு பிரதேச செயல்களையும் இணைத்து வைக்கின்றீர்கள்.
இது வடக்கு செயலகப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு செய்கின்ற துரோகமாகவே நாங்கள் பார்க்கின்றோம். இதனை இந்த அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்த சபையில் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.