
ஹராரேவில் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் சிம்பாப்வே அணி வீரர், சிக்கந்தர் ராசா ஐசிசி ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் சகலதுறை வீரர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் போட்டிகளில் 39 வயதான வலது கைது துடுப்பாட்ட வீரர் இரண்டு அரை சதங்களை விளாசினார்.
அதேநேரம் பந்து வீச்சிலும் அணிக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கிய அவர், முதல் ஒருநாள் போட்டியில் 48 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.
இந்த முயற்சி ராசாவுக்கு ஆப்கானிஸ்தான் நட்சத்திரங்களான மொஹமட் நபி (292 புள்ளிகள்) மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் (296) ஆகியோரை முந்தி 302 புள்ளிகளைப் பெற உதவியது.
மேலும், அவரது துடுப்பாட்ட செயல்திறன் அவரை ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் ஒன்பது இடங்கள் முன்னேறி 22 ஆவது இடத்திற்கு கொண்டு சென்றது.
அதேநேரம், அண்மைய ஐசிசி தரப்படுத்தலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெற்றது இலங்கை வீரர்கள் தான்.
அவர்கள் ஹராரே விளையாட்டுக் கழக்த்தில் நடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றனர்.
பத்தும் நிசங்க இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 122 மற்றும் 76 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் ஒருநாள் ஆடவர் துடுப்பாட்ட வீரர்கள் தவரிசையில் ஏழு இடங்கள் முன்னேறி 13 ஆவது இடத்தைப் பிடித்தார் (654 புள்ளிகள்).
இலங்கையின் மற்றொரு துடுப்பாட வீரரான ஜனித் லியனகே 13 இடங்கள் முன்னேறி 29 ஆவது இடத்தைப் பிடித்தார்.
அதேநேரத்தில், பந்துவீச்சு தரவரிசையில் வேகப்பந்து வீச்சாளர்கள் அசிதா பெர்னாண்டோ 6 இடங்கள் முன்னேறி 31 ஆவது இடத்தைப் பிடித்தார்.
இரண்டாவது போட்டியில் இறுதி ஓவரில் ஹெட்ரிக் எடுத்த தில்ஷான் மதுஷங்க 8 இடங்கள் முன்னேறி 52 ஆவது இடத்தைப் பிடித்தார்.
ஹெடிங்லியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவும் முன்னேற்றத்தைக் கண்டது, இதில் கேஷவ் மகாராஜ் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 31 மதிப்பீட்டு புள்ளிகள் முன்னிலை (690 புள்ளிகள்) பெற்று பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.