ஊரடங்கு நேரத்திலும் சமுர்த்தி வங்கிகள் திறப்பு – மனிதாபிமான பணிகள் முன்னெடுப்பு

வி.சுகிர்தகுமார்
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் மக்கள் நலன்கருதி அம்பாரை மாவட்ட சமுர்த்தி வங்கிகள் திறக்கப்பட்டு வங்கி உள்ளக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் மூலம் மக்களுக்கான கடனை வழங்குவதற்கான பணிகள் சமுர்த்தி பிரிவினரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மூலம் துரிதப்படுத்தபட்டு கடனும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவிற்கமைய சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்றுநிருபங்களுக்கமைய இப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
அம்பாரை மாவட்டத்தில் சுமார் 12 கோடி ரூபாவிற்கும் மேற்பட்ட கடன் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வங்கிகளிலும் இக்கடன்கள் வழங்கவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக சகன பியவர மற்றும் அருநெலு எனும் பெயர்களில் இக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேநேரம் மக்கள் அதிகமாக ஒன்று கூடும் சமுர்த்தி வங்கியில் கிருமி தொற்றை நீக்கும் பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தலைமையிலான குழவினர் தொற்று நீக்கி மருந்தினை விசிறும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டனர்.
ஊரடங்கு நிலையினால் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மயான அமைதி நிலவியதுடன் பாதுகாப்பு தரப்பினர் தமது ரோந்து நடவடிக்கையினையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மகத்தான நிவாரணப்பணியை முன்னெடுக்கும் அனைத்து தரப்பினருக்கும் தமது நன்றியை தெரிவிப்பதாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் காலத்தில் நிவாரணப்பணியை முன்னெடுக்கும் தனிநபர் உள்ளிட்ட சமூக அமைப்புக்கள் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் பிரதேச செயலகத்தின் அனுமதி பெற்றதன் பின்னரே வழங்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதேச செயலாளரின் அனுமதி பெற்றதன் பின்னர் கிராம உத்தியோகத்தர்கள் வழங்கும் முன்னுரிமை பட்டியல் அடிப்படையிலேயே நிவாணரப்பணி இடம்பெற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.