இந்தியப் பெருங்கடலுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியான கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் புதன்கிழமை (30) 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கண்டறியப்பட்டதுடன், பரவலான சுனாமி எச்சரிக்கையையும் தூண்டியது.
எனினும், இதனால், இந்தியாவிற்கோ அல்லது இந்தியப் பெருங்கடலிற்கோ சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்பதை இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) உறுதிப்படுத்தியது.
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இதனால், பசுபிக் கடல் பகுதியின் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல் சுனாமி அலை அப்பகுதியின் ரஷ்யாவின் முக்கிய நகரமான செவெரோ-குரில்ஸ்கைத் தாக்கியதாக உள்ளூர் ஆளுநர் வலேரி லிமரென்கோ உறுதிப்படுத்தினார்.
கூடுதல் அலைகள் ஏற்படும் அபாயம் நீங்கும் வரை குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், உயரமான நிலங்களில் தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின்படி, ஜப்பானின் ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள நெமுரோவை சுமார் 30 சென்றி மீட்டர் சுனாமி அலை அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கம்சட்கா தீபகற்பத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள ரஷ்ய பகுதிகளில் சேதம் மற்றும் வெளியேற்றங்கள் பதிவாகியுள்ளன.
ஹவாய், சிலி, ஜப்பான் மற்றும் சாலமன் தீவுகளின் சில கடலோரப் பகுதிகளில், அலை மட்டத்திலிருந்து 1 முதல் 3 மீட்டர் உயர அலைகள் எழ வாய்ப்புள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் ஈக்வடாரின் சில கடலோரப் பகுதிகளில், 3 மீட்டருக்கும் அதிகமான அலைகள் எழ வாய்ப்புள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.