அயல் வீட்டிலும் கொரோனா இருக்கலாம் எனும் எச்சரிக்கையோடும் பாதுகாப்பாக வாழ பழகிக் கொள்ளுங்கள்:ஆலையடிவேம்பு பொதுச்சுகாதார பரிசோதகர் ப.கேதீஸ்வரன்…

வி.சுகிர்தகுமார்
அயல் வீட்டிலும் கொரோனா இருக்கலாம் எனும் சிந்தனையோடும் எச்சரிக்கையோடும் பாதுகாப்பாக வாழ பழகிக் கொள்ளுங்கள். அப்போதே நாம் சுகதேகிகளாக வாழ முடியும் என ஆலையடிவேம்பு பொதுச்சுகாதார பரிசோதகர் ப.கேதீஸ்வரன் கூறினார்.
கல்வி அமைச்சின் சுற்றுநிரூபங்களுக்கு அமைவாக தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட வகுப்பினையுடைய பாடசாலைகளை ஆரம்பிக்கும் முன்னாயத்த கலந்துரையாடல்கள் வலய கல்வி மட்டங்களில் இடம் பெற்று வருகின்றன.
இதற்கு அமைவாக அம்பாரை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்டமட்ட பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல் வழங்கும் கூட்டம் திருக்கோவில் வலய கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரனின் வழிகாட்டலில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுரநுதன் தலைமையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஸ்ணமிஷன் மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று(22) இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் சுகாதார அமைச்சு அவ்வப்போது பல சுற்றுநிருபங்களை வெளியிட்டு வருகின்றது. அதன்படியே நாங்கள் செயற்படுகின்றோம்.
இருப்பினும் பொதுமக்கள் விழிப்போடு செயற்படாத வரையில் எமது பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்றார்.
இதேநேரம் இங்கு கருத்து தெரிவித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுரநுதன் மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை ஆரம்பித்தல் என்பது மிகவும் கட்டாயாமானது. அதேநேரம் அவர்களது பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது. இவ்விரண்டு விடயங்களையும் கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளோடு நாளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றது என்றார்.
ஆகவே பாடாசாலை அதிபர்கள் உள்ளிட்ட கல்விச்சமூகம் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் பெற்றோர்கள் உள்ளிட்டவர்கள் ஒன்றிணைந்து இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இக் கூட்டத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளர் ரி. பரமதயாளன் பொதுச் சுகாதார பரிசோதர்களான பி.கேதீஸ்வரன், இ.மோனகதாஸ் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.சரிப் பொலிஸ் உத்தியோகத்தர் எம்.சுதர்சன் கிராம உத்தியோகத்தர் வி.கார்த்திகா உள்ளிட்ட பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் இறுதியில் பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பில் அதிபர்களினால் முன்வைக்கப்பட்ட சந்தேகங்களுக்கான பதில்களையும் கல்வி அதிகாரிகளும் சுகாதார அதிகாரிகளும் வழங்கினர்.