அம்பாரை மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த மற்றும் நடக்கவிருக்கும் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்….

வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் இடையிலான கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் அக்கரைப்பற்றில் இன்று நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர் வி.பரமசிங்கம் தலைமையில் அம்பாரை மாவட்ட சிவில் சமூக இணைப்பாளர் ஆர்.விக்னேஸ்வரன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.சுகுணன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் உள்ளிட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அம்பாரை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அம்பாரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பிற்காக அரசாங்கமும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பான சேவைகள் பற்றி பணிப்பாளர் சுகுணன் விளக்கினார்.
அத்தோடு இப்பணிகளை முன்னெடுக்கும்போது தாங்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பாகவும் அதனையும் தாண்டி சுகாதார துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இப்பணியில் இணைந்து கொண்டு தங்களால் முடிந்த ஒத்தாசைகளையும் உதவிகளையும் வழங்குமாறு என கேட்டுக்கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் சுகாதார துறையினருக்கு பாதுகாப்பான முகக்கவசங்கள் மற்றும் பாதுகாப்பு அங்கிகள் போன்ற இரு முக்கிய தேவைப்பாடுகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுகாதார துறையினருக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் எழுத்து மூலமாக கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அதனை பெற்றுக்கொடுக்க முயற்சி மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டனர்.



