அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை மூலம் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பணம் மீண்டும் பொதுமக்களிடமே கொண்டு சேர்க்கப்படுகிறது – தேசிய லொத்தர் சபையின் தலைவர் !

அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை மூலம் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பணத்தை நாங்கள் என்ன செய்கிறோம் என பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளது. தேசிய லொத்தர் சபைக்கு கிடைக்கும் நிதி பொதுமக்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இதனால் தேசிய லொத்தர் சபைக்கு நூற்றுக்கு 3 வீதம் மாத்திரமே இலாபம் கிடைக்கிறது என தேசிய லொத்தர் சபையின் தலைவர் எம்.டி. சிறில் அந்தோனி பெரேரா தெரிவித்துள்ளார்.
தேசிய லொத்தர் சபை மற்றும் எல்ல பிரதேச சபை இணைந்து பதுளை – எல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளவுள்ள “இன்னும் கொஞ்சம் கவனமாக” என்ற வீதி பாதுகாப்பு திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் வியாழக்கிழமை (23) காலை கைச்சாத்திடப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தேசிய லொத்தர் சபையின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய லொத்தர் சபையின் தலைவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய லொத்தர் சபை பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. ஒரு அதிஸ்டலாபச்சீட்டு 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை மூலம் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பணத்தை நாங்கள் என்ன செய்கிறோம் என பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளது.
உண்மையிலேயே அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை மூலம் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பணம் மீண்டும் பொதுமக்களிடமே கொண்டு சேர்க்கப்படுகிறது. அதிஷ்டலாபச்சீட்டு விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் நூற்றுக்கு 24 வீதம் சீட்டிழுப்பு பரிசுகளாக மீண்டும் பொதுமக்களிடமே கொண்டு சேர்க்கப்படுகிறது.
அதிஷ்டலாபச்சீட்டுக்களின் விற்பனை மூலம் கிடைக்க்பெறும் பணத்தில் தான் தேசிய லொத்தர் சபையின் கீழ் இயங்கும் ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. எஞ்சிய பங்கு அதிஷ்டலாபச்சீட்டுக்களை விற்பனை செய்யும் நிலையங்கள் மற்றும் நிதி அமைச்சிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. இதனால் தேசிய லொத்தர் சபைக்கு நூற்றுக்கு 3 வீதம் மாத்திரமே இலாபம் கிடைக்கிறது.
இவ்வாறு கிடைக்கும் இலாபத்தையும் தேசிய லொத்தர் சபை, பொதுமக்களுக்கான பல்வேறு செயற்திட்டங்கள் மற்றும் நிதி உதவிகள் ஊடாக மீண்டும் பொதுமக்களுக்கே வழங்குகிறது.
வீதி பாதுகாப்பு திட்டங்கள், வீதி அபிவிருத்தி திட்டங்கள், தேசிய சிறுநீரக நிதி, விவசாயிகள் நிதி, விளையாட்டு மேம்பாட்டு நிதி போன்ற பல்வேறு நிதி உதவிகளை தேசிய லொத்தர் சபை பொதுமக்களுக்காக வழங்கி வருகிறது.
உதாரணமாக தேசிய சிறுநீரக நிதிக்காக 2024 ஆம் ஆண்டில் 33 மில்லியன் ரூபாவையும் 2025 ஆம் ஆண்டின் 10 மாத காலப்பகுதிக்குள் 53 மில்லியன் ரூபாவையும் வழங்கியுள்ளோம். அதிஷ்டலாபச்சீட்டுக்களை பொதுமக்கள் கொள்வனவு செய்வதனால் தான் இந்த நிதி உதவிகளை எம்மால் வழங்க முடிகிறது.
இந்நிலையில், எல்ல பிரதேசத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் எல்ல பிரதேச சபையுடன் இணைந்து எல்ல பிரதேசத்தில் உள்ள வீதிகளை புனரமைத்து சீரமைப்பதற்கு “இன்னும் கொஞ்சம் கவனமாக” என்ற வீதி பாதுகாப்பு திட்டத்தை மேற்கொள்ள உள்ளோம்.
இதேவேளை, தேசிய லொத்தர் சபை, எதிர்வரும் காலங்களிலும் பொதுமக்களுக்காக பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் எம்.டி. சிறில் அந்தோனி பெரேரா மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் எல்ல பிரதேச சபையின் தவிசாளர் வெனுர மலிந்த திசாநாயக்க மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.