கலப்பையுடன் உழவு இயந்திரம் செலுத்துபவர்கள் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் பயணங்களை முடிந்தவரை தவிருங்கள்…..
அக்கரைப்பற்று சாகாமம் பிரதான வீதியில் இன்று (25) மாலை 6.15 மணியளவில் வட்ட ரக வாகனத்துடன் எதிர் திசையில் கலப்பையுடன் வருகை தந்த உழவு இயந்திரத்தின் கலப்பை சிக்குண்டு வட்ட ரக வாகனத்தின் ஒரு பகுதி சேதமுற்றது, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.
இதன்போது அக்கரைப்பற்று, சாகாமம் பிரதான வீதி அர்ச்சனா திரையரங்கிற்கு அருகாமையில் சுமார் 30 நிமிடம் வரை வாகனங்கள் செல்வதற்கு சிறிய தடை ஏற்பட்டு வாகனங்கள் நெரிசலுடன் பயணத்திருந்தது.
அக்கரைப்பற்று போக்குவரத்து பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமையை வழமைக்கு கொண்டு வந்திருந்தனர்.
வயல் நிலங்களில் தற்போது உழுதல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதால் உழவு இயந்திரங்கள் வீதிகளில் அதிகளவு பயணங்கள் மேற்கொள்வதை காணக்கூடியதாக உள்ளது.
கலப்பை பொருத்தப்பட்டு உழவு இயந்திரம் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் பயணங்களை மேற்கொள்வது ஏனைய மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விடயமாக இருந்து வருகிறது.
பெரும்பாலும் காலை வேளைகளில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் நேரங்களில் கலப்பை பொருத்தப்பட்ட உழவு இயந்திரம் பயணங்கள் மேற்கொள்வதனை பெரிதும் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
இது மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் உழவு இயந்திர சாரதிகள் குறித்த விடயங்களை கவனத்தில் கொண்டு செயல்படுமாறு பிரதேச மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.



