இலங்கைபிரதான செய்திகள்
Trending

எரிபொருள் QR பதிவு செய்வதில் சிக்கல் ;இரண்டாம் உரிமையாளர்கள் பாதிப்பு; விவசாயிகளுக்கு விசேட சலுகை !

எரிபொருள் விநியோகத்துக்காக கோட்டா (OR) முறைமையை பதிவு செய்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள். வாகனத்தின் இரண்டாம் உரித்தாளர்கள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இதனால் எரிபொருள் வரிசை தொடர்ந்த வண்ணமே காணப்படுகிறது.

பல்வேறு தொழிற்றுறையினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய எரிபொருள் ஒதுக்கீடு அளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழலை கருத்திற் கொண்டு எரிபொருளை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு வலுசக்தி அமைச்சு பொதுமக்களிடம் வலியுறுத்துகிறது.

சகல தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தால் அத்தியாவசிய சேவை மற்றும் அவசர களஞ்சியப்படுத்தலில் பாதிப்பு ஏற்படும். ஆகவே இயலுமான அளவில் தேவைகளை மட்டுப்படுத்திக் கொண்டு நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்ய ஒத்துழைக்குமாறு வலுசக்தி அமைச்சு மக்களிடம் வலியுறுத்துகிறது.

கையிருப்பில் உள்ள எரிபொருளை சிக்கனமாக விநியோகிக்கும் வகையில் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலுக்கு வரும் கோட்டா (க்யூஆர்) முறைமையை அமுல்படுத்தியது. மோட்டார் சைக்கிள், மோட்டார் கார், வேன், பஸ், முச்சக்கர வண்டி, நில வாகனம், அம்புலன்ஸ் மற்றும் பாரவூர்தி ஆகிய வாகனங்களுக்கு கோட்டா முறைமையில் எரிபொருள் விநியோகித்தல் ஆரம்பமானது.

கோட்டா முறைமை அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசை காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பெரும்பாலான பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ‘எரிபொருள் இல்லை’ என்று பதாதைகள் போடப்பட்டு எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.இதனால் ஒருசில பகுதிகளில் எரிபொருள் வரிசை இரட்டை நிரலாக காணப்பட்டது.

கோட்டா முறைமை பதிவின் போது பெரும்பாலானோர் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். வாகத்தின் பாவனையாளர் இரண்டாவது உரித்தாளராக காணப்படும் சந்தர்ப்பத்தில் அவர் கோட்டா முறைமைக்கு பதியும் போது ‘ ஏற்கெனவே பதியப்பட்டுள்ளது’ என்று விண்ணப்பத்தின் இறுதியில் பதிலளிக்கப்படுவதால் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகி, கோட்டா முறைமையை பதியாமல் எரிபொருள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாகன அடிப்படையில் ஒதுக்கப்பட்ட எரிபொருள் அளவு தமக்கு போதாது, எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் குறிப்பிடுகிறார்கள்.

தனியார் பேரூந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு ஒரு வார காலத்திற்காக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பேருந்துகள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் அவற்றுக்கான எரிபொருள் அளவு தீர்மானிக்கப்படும். எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை பேருந்துகளுக்குத் தேவையான எரிபொருளை இலங்கை போக்குவரத்துச் சபையிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதில் சிக்கல்

எரிபொருள் விநியோகத்திற்காக அமுல்படுத்திய கோட்டா முறைமை காரணமாக வாகன இறக்குமதியாளர்கள் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே குறிப்பிட்டுள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது அவற்றுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.இதற்குத் தகுந்த வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்கித் தர வேண்டும்.

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது அவை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைகின்றன.அங்கிருந்து அத்தகு வாகனங்களை கொழும்புக்கு கொண்டு வருவதில் எரிபொருள் தட்டுப்பாடு பெரும் தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்திற்கு வரத் தயாராக இருப்பிறோம்.

மாதாந்தம் சுமார் 100 முதல் 150 வரையிலான வாகனங்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. இந்த வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக விசேட கோட்டா, நடைமுறை அல்லது எரிபொருள் ஒதுக்கீடு ஒன்றை உருவாக்குவது அவசியமானது என்றார்.

விவசாயிகளுக்கு விசேட சலுகை எரிபொருள் அனுமதிப் பத்திரம் கோட்டா குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி அறுவடை பணிகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 15 லீட்டர் எரிபொருளும், நிலம் உழுது தயார்படுத்தல் பணிகளுக்காக ஏக்கருக்கு 20 லீட்டர் எரிபொருளும் விவசாயிகளுக்கு கோட்டா குறியீடின்றி வழங்கப்படும்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker