இலங்கை

இலங்கை ‘3A’ என்ற கட்டத்தில் இருந்து ‘3B’ இற்குச் சென்றால் பெரும் ஆபத்து- மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை ‘3A’ என்ற கட்டத்திலுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களில் அபாயகரமான அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல நேரிடும் என குறித்த சங்கம் எச்சரித்துள்ளது.

இவ்வாறு அபாயக் கட்டத்திற்கு செல்லாமலிருப்பதற்கு 3 காரணிகளை அரசாங்கத்திடம் முன்மொழிந்திருக்கும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் , கொரோனா பரவலைக் குறைக்கும் வழிமுறையாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுமெனின் அதனை 80 முதல் 90 வீதமாகப் பேணுதல் அத்தியாவசியமாகும்.

எனினும் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அடிக்கடி அது தளர்த்தப்படுவதால் திறனான கட்டுப்பாட்டைப் பேணுதல் பிரயோக ரீதியாக சவாலுக்கு உட்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து, மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே குறிப்பிடுகையில், “கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கு அமைய இலங்கை தற்போது ‘3A’ என்ற கட்டத்தில் உள்ளது.

‘3A’ கட்டம் எனப்படுவது வீடுகளினுள் கூட்டுத் தொற்று நிலையாகும். இவ்வாறு இலங்கையில் தற்போது பல பிரதேசங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கை இதிலிருந்து அடுத்தக் கட்டமான ‘3B’ கட்டத்திற்குச் செல்லாமலிருப்பதற்கு தற்போதுள்ளதைவிடவும் கடுமையான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ‘3B’ எனும் கட்டம் கிராமம் அல்லது நகரத்தினுள் குழுக்களாக தொற்று நிலை இனங்காணுதலாகும்.

எனவே, தற்போது முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இலங்கை அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல வேண்டியேற்படும். மாறாக முறையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் இதற்கு முதற்கட்டத்திற்குச் சென்று அதன்பின்னர் நோயாளர்கள் அற்ற கட்டத்திற்கும் செல்ல முடியும். இதில் 4 ஆவது கட்டம் மிகப் பாரதூரமானதாகும். சமூகத்தினுள் பரவும் நிலையே 4 ஆவது கட்டமாகும்.

80 வீதத்துக்கும் அதிகமாக சமூக இடைவெளியைப் பேணும் நாடுகளே வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதில் முழுமையான பயனை அடைகின்றன. சமூக இடைவெளி என்பது பாதுகாப்பிற்கான பிரதான வழிமுறையாகும்” என்று குறிப்பிட்டார்.

இதேவேளை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயங்கள் தொடபாக மேலும் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், “தற்போது செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் இந்த சந்தர்ப்பத்தில் எடுக்கத்தக்க அனைத்து தீவிர நடவடிக்கைகள் மற்றும் உக்கிரமான தீர்வுகள் மூலம் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கத்துவ நாடுகள் அனைத்திற்கும் தீவிரமாக எச்சரித்துள்ளது. இலங்கையிலும் அவ்வாறு முன்னெடுக்க வேண்டிய படிமுறைகள் பல உள்ளன.

கொரோனா வைரஸானது மிக வேகமாகப் பரவும் அதேவேளை திட்டவட்டமான எதிர் நவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதவிடத்து ஒரு நபரிடமிருந்து ஒரு மாத்திற்குள் இன்னும் 406 பேருக்கு பரவக் கூடிய அபாயமுள்ளதாகும்.

நோயாளர்களில் 20 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் வெளிப்படமாட்டாது. இன்னும் 60 வீதமனோருக்கு மிகவும் எளிய நோய் அறிகுறிகளே வெளிப்படும். அதனால் உண்மையாகவே கொரோனா தொற்றுக்கு இலக்காகி நோயை வேறு நபர்களுக்கு பரப்பும் நோயாளர்களில் 80 வீதமானோர் மேலோட்டமான பார்வைக்கு நோயாளர்களாக இனங்காண முடியாத வகையைச் சேர்ந்தவர்களாவர். அதனை மறைந்திருந்து நோயைப் பரப்பும் வகையாக அடையாளப்படுத்தலாம்.

கொரோனாவை இனங்காணக்கூடிய PCR பரிசோதனையின் உணர் திறன் 70 வீதமாகும். அதாவது இப்பரிசோதனைக்கு உட்படுவோரில் 30 வீதமானோர் உண்மையாக நோயைக் கொண்டிருந்தபோதும் நோயாளர்களாக இனங்காணப்படமாட்டார்கள். அவர்களால் ஏனையோருக்கு கொரோனா வைரஸ் பரவக் கூடியதால் இந்நிலை அபாயகரமானதாகும்.

மேலும் கொரோனா பரவலைக் குறைக்கும் வழிமுறையாக மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுமெனின் அதனை 80 முதல் 90 வீதமாகப் பேணுதல் அத்தியாவசியமாகும். எனினும் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக அடிக்கடி அது தளர்த்தப்படுவதால் திறனான கட்டுப்பாட்டை பேணுதல் பிரயோக ரீதியாக சவாலுக்கு உட்படுகின்றது.

அதேபோல் சிறு எண்ணிக்கையான மக்கள் பொறுப்பின்றிய விதத்தில் செயற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அம்மக்களின் எண்ணிக்கை சிறியதாக இருப்பினும் அவர்களால் விளையக் கூடிய பாதகம் மிகப் பெரியதாகும்.

இவ்வாறான காரணிகளை வைத்து இலங்கையினுள் கொரோனா வைரஸிற்கு முகங்கொடுக்கும் வழிமுறையானது கீழ் குறிப்பிடப்படும் வகையில் அமைய வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 3 பிரதான காரணிகள் முன்மொழியப்படுகின்றன.

1. தனிநபர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தல் (ஆகக் குறைந்தது 80 வீதமான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்).

2. தீவிரமான விதத்தில் நோயாளர்களை இனங்காணுதல் (பரிசோதனை வசதிகளை மேம்படுத்தல்)

3.நோய் சிகிச்சைக்களென பிரத்தியேகமாக மருத்துவமனைகளை ஏற்பாடு செய்தல் என்பனவே எமது முன்மொழிவுகளாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker