பிரசவத்தின்போது உயிரிழந்த சிசு – வைத்தியசாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின்போது சிசுவொன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிசுவின் உறவினர்களால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு முகத்துவாரத்தைச் சேர்ந்த 30வயதுடைய பெண்னொருவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து சுகப்பிரசவம் மூலமே குழந்தையினைப் பெறவேண்டும் என வைத்தியர்கள் கூறிய நிலையில், சத்திரசிகிச்சை மூலம் குழந்தையினை வெளியில் எடுக்குமாறு உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று (புதன்கிழமை) குறித்த பெண்ணுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து பிரசவிக்கப்பட்ட சிசுவை யாரிடமும் காண்பிக்காமல் கழிவுகள் போடும் பெட்டியொன்றுக்குள் போட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் சிசு உயிரிழந்த நிலையில் பெட்டிக்குள் போடப்பட்டிருந்ததாகவும் சிசுவின் தலைப்பகுதியில் பலத்த காயம் காணப்பட்டதாகவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே சத்திரசிகிச்சை மேற்கொண்டபோது கத்தரிக்கோலினால் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாமென உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும் இந்த குழந்தை தொடர்பான தகவல்களை வழங்காமல் வைத்தியர்களும் தாதியர்களும் மறைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டதாகவும் உயிரிழந்த சிசுவின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளர்.

குறித்த தாய் தொடர்ச்சியாக மருத்துவ சோதனைகளை மேற்கொண்டுவந்த நிலையிலும் சிசு ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இவ்வாறு சிசு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சத்திரசிகிச்சையின்போது குழந்தை உயிரிழந்துள்ளமை தொடர்பாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
				 
					


