துப்பாக்கிப் பிரயோக எதிரொலி : வால்மார்ட் துப்பாக்கி விற்பனையை தடைசெய்ய மக்கள் கோரிக்கை!

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதன் விளைவாக அந்நாட்டில் வால்மார்ட், துப்பாக்கி விற்பனையை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய நகரங்களான டெக்சாஸ் , ஒஹியோ மற்றும் சிகாகோ உள்ளிட்டவற்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் அந்த பகுதிகள் சற்று நிலைகுலைந்துள்ளன.
கடந்த சனிக்கிழமையன்று டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாஸோ நகரத்தில் உள்ள வால்மார்ட் சீலோ விஸ்டா மாலில் நுழைந்த சந்தேகநபர் அங்கிருந்தவர்களை தனது துப்பாக்கியால் சரமரியாக சுட்டார். இதில் 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் 26-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்தில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கிளப்பில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
மீண்டும் ஞாயிற்றுக்கிழமையன்று சிகாகோ நகரின் டக்ளஸ் பூங்காவிற்கு காரில் வந்த ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார்.
இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர் தாக்குதல் சம்பவங்களினால் அப்பகுதி மக்கள் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.