திருக்கோவிலில் கடல் அரிப்பு; சாய்ந்தது தென்னை மரம் :கடற்கரையோரத்தை பாதுகாக்குமாறு மக்கள் வேண்டுகோள்!!


ஜினுஜன்
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தாண்டியடிப் பிரதேசம் தொடக்கம் தம்பட்டைப் பிரதேசம்வரை சுமார் 20 கிலோமீற்றர் தூரம் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டு வருகின்றது.
கடல் அரிப்பினால்; கடல் வளங்களும் தென்னை மரங்களும் பாதிக்கப்படுகின்றன. அத்துடன், மீன்பிடி வள்ளங்கள் நிறுத்துவதற்கான இடமும் பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமும் இல்லாமல் போகும் சந்தர்ப்பமும் உள்ளது. எனவே, சிறந்த கடற்கரையோர சூழலை பாதுக்காப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பிரதேசத்திலுள்ள மக்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் பெரியநீலாவணை, கல்முனை, நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் உல்லை ஆகிய பிரதேசங்கள் கடல் அரிப்பினால் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள மீனவர்களது மீன்வாடிகள், மீனவகட்டிடங்கள், மீனவர் குடியிருப்பு மனைகள் ஆகியன கடல் அரிப்பினால் மீன்பிடி உபகரணங்களை வீதியின் ஓரத்திலே நிறுத்தி வைக்கவேண்டிய அவலநிலை மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 4500 இற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் விசிக்கின்றன. கடல் அரிப்பினால் தென்னை மரங்கள் கடலுக்கு இரையாகிவருகின்றன. இதனால் அம்பாறை மாவட்டத்தில் தெங்குச் செய்கையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்பே வேகமாக கடல் அரிப்பு இடம்பெறுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இம்மாவட்டத்தில் ஏற்படும் கடல் அரிப்பினால் கடற்கரையோரங்களிலுள்ள கிராமங்கள் பல தமது நிலப்பகுதியை இழந்து வருகின்றன.
திருக்கோவில் பிரதேசத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் எதிர்காலத்தில் கடலினால் காவு கொள்ளப்படும் அபாயம் நிலவுவதாகவும் கடல் அரிப்பினை கட்டுப்படுத்த அரசாங்கமும், அதிகாரிகளும் ஈடுபடவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.









