இலங்கை

தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் – மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் வாருங்கள் : டக்ளஸ் தேவானந்தா அழைப்பு

பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாள் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மக்கள் வாழ்வாதாரம் – சுகாதாரம் – பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், மக்களது பிரச்சினைகளை வேறு திசை நோக்கி திருப்பிவிடுகின்ற செயல்களில் போலி தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களும், அதிதீவிர போலி தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்களும் ஈடுப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், ‘எமது மக்கள் முகங்கொடுத்துள்ள உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வராமல், அந்தப் பிரச்சினைகளை மேலும் வளரவிடுவதும், அதனோடு மேலும் பல பிரச்சினைகளை கோர்த்து விடுவதும் இவர்களது வரலாற்று செயற்பாடுகளாகவே தொடர்கின்றன.

புரெவி புயல் வந்துவிட்டுப் போய் விட்டது. ஆனால் இந்த போலித் தமிழ்த் தேசியவாதிகளின் பிறவிக் குணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆயிரம் புரெவிகள் வந்தாலும் இவர்களது பிறவிக் குணங்கள் மாறுமா? என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.

இறுதி யுத்தத்தின்போது யார் யார் எங்கிருந்தார்கள் என்பது பற்றி இப்போது அறிக்கை பட்டிமன்றம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த அழிவு ஏற்படக் கூடாது என்ற எனது மனிதாபிமான நோக்கு காரணமாக அதனை நிறுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சஷவுடன் பேசுவோம் வாருங்கள் என அப்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்களை அழைத்தபோது, அவர்கள் அதற்கு இணங்கியிருக்கவில்லை. புலிகள் அழிய வேண்டும் என்ற மனநிலையிலே இருந்தார்கள்.

அதை வெளிப்படையாகக் காட்டாமல், புலிகள் நின்றடிப்பார்கள் – விட்டடிப்பார்கள் – 40 ஆயிரம் சவப்பெட்டிகளைத் தயார் செய்யுங்கள் என்றெல்லாம் கதைவிட்டுக் கொண்டு, அழிவுக்கு துணை போனார்கள்.

இந்த நாட்டில் பேரினவாதத்திற்கும் குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிகளின் இனவாதத்திற்கும் இடையில் ஒப்பந்தங்கள் இருக்கக் கூடாது என்பதையே நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

எனவே பதின்மூன்று பேர் சேர்ந்து, எமது மக்களை தொடர்ந்தும் மிதித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையை ஏற்படுத்தாமல் – எமது மக்களை மதித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையை இந்த நாட்டில் ஏற்படுத்தவதற்கு முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தன்னுடைய ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், தமிழ் மக்களுக்கு அன்றாட – அபிவிருத்தி மற்றும் அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் உள்ளது என்பதை வலியுறுத்தியதுடன், அதேபோன்று முஸ்லிம் மக்களுக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்ற நிலையில் அவற்றை தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் ஊடாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே அரசாங்கத்துடன் இணைந்து எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பகிரங்க அழைப்பினை விடுப்பதாவும் இறுதி யுத்த காலத்தில் அதனை புறக்கணித்தது போன்று, எமது மக்களின் நலன்கருதிய இந்த அழைப்பையும் சுய இலாபங்களுக்காக கோட்டைவிட்டு விடாது, கைகோர்த்து வரும்படி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker